இடிக்கப்பட்ட வீடு, சம்பவம் ட்விட்டர்
இந்தியா

அதிரடி கைது; வீடு இடிப்பு.. ஊர்வலத்தில் எச்சில் துப்பிய முஸ்லிம் இளைஞருக்கு 5 மாதம் கழித்து ஜாமீன்

இந்து மத ஊர்வலத்தின்போது எச்சில் துப்பிய முஸ்லிம் இளைஞருக்கு, 5 மாதம் கழித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Prakash J

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கடந்த ஆண்டு (2023) ஜூலை மாதம் 16-ஆம் தேதி பாபா மஹாகால் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலம் ஷிப்ரா ஆற்றின் குறுக்கே கரகுவான் காவல் நிலைய மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இருப்புத் தொட்டியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது, ஒரு வீட்டின் மாடியில் நின்றிருந்த இஸ்லாமிய நபர்கள் சிலர், ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்த இந்து பக்தர்கள் மீது எச்சிலை துப்பியதாக காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.

அதில் இருவர் சிறார்கள் என்பதும், ஒருவர் இளைஞர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த இளைஞர்கள் அடுத்த சில நாட்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று, அடுத்த சில நாட்களில் அந்த இளைஞர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. வீடுகள் இடிக்கப்பட்ட நேரத்தில் வெளியில் ட்ரம்ஸ் வாசித்து கொண்டாட்டம் நடத்திய வீடியோ இணையத்தில் பரவியது. ஆக்கிரமிப்பைக் காரணம் காட்டி அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உஜ்ஜையினியில் முஸ்லிம்களின் வீடுகளை மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளுவது இது முதல்முறையல்ல.

இதற்கு முன்பு, 2020 டிசம்பர் 25ஆம் தேதி, ராமர் கோயில் நிதி சேகரிப்பு பேரணியின்போது, ​​​​பேகம் பாக் குடியிருப்பாளர்களுக்கும் பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவிற்கும் இடையே கல் வீசப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் அந்த முஸ்லிம் குடியிருப்பாளர்களின் வீடுகளை இடித்தது.

அதைத்தொடர்ந்து, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில், சில முஸ்லிம் சில்லறை கடைக்காரர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. இதேபோல், காசி எஸ்பி ஜிந்தாபாத் முழக்கங்களை எழுப்புவது தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, முஸ்லிம்களின் வீடுகளும் புல்டோசர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் உஜ்ஜைனி ஊர்வல எச்சில் துப்பிய வழக்கில் இளைஞருக்கு தற்போதுதான் ஜாமீன் கிடைக்கப்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 5 மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, அந்த சிறுவர்களுக்கு ஜாமீன் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவேந்திர சிங் செங்கார், ”இந்த விவகாரம் சரியாக விசாரிக்கப்படவில்லை. இதுபோன்ற மத உணர்வுள்ள வழக்கில், போலீசார் கவனமாகவும் தீவிரமாகவும் விசாரணை நடத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஜாமீனில் வெளிவந்துள்ள அட்னானின் தந்தை அஷ்ரப், ”எனது மகன் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. எனக்கு யாரிடமிருந்தும் எதுவும் வேண்டாம், குழந்தைகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், அதுதான் எனக்கு வேண்டும். இந்த விஷயத்தில் தவறு நடந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எங்களுக்கு குழந்தைகள் வேண்டும். நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்” என்றார்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட கரகுவா போலீஸ் அதிகாரி லிவன் குஜூர், “விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம்தான் கருத்து சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.