இந்தியா

`பிராந்தியவாதம் வென்றது...' - அசாமில் சிறையில் இருந்தபடியே பாஜகவை கலங்கடித்த அகில் கோகாய்!

`பிராந்தியவாதம் வென்றது...' - அசாமில் சிறையில் இருந்தபடியே பாஜகவை கலங்கடித்த அகில் கோகாய்!

நிவேதா ஜெகராஜா

அசாமில், சிறையில் இருந்தபடியே தேர்தலில் வெற்றிபெற்ற அகில் கோசாய் என்பவர், தன்னுடைய வெற்றி மடலில், மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக பல வருடங்களாக போராடி வரும் செயற்பாட்டாளர், அகில் கோகாய். அசாம் மாநிலத்தில் கடுமையாக எதிர்க்கப்ட்டு வரும் குடியுரிமை சட்டத்தையும் எதிர்த்து போராடிய போராளிகளில், மிக முக்கியமானவர் இவர். அதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு, ஓராண்டுக்கும் மேலான சிறைவாசம். அசாம் மாநிலத்தில் சிஏஏ (குடியுரிமை திருத்தச் சட்டம்) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 2019 டிசம்பரில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அகில் கோகோய்.

சிறைவாசத்தில் இருந்தபோது, தன் வாழ்வின் அடுத்தகட்டமாக, அரசியலில் ஈடுபட முனைந்தார் அகில். அந்த வகையில் ‘ராய்ஜோர் தாள்’ என்ற கட்சியை அப்போது அவர் துவங்கினார். கடந்த ஆண்டு அக்டோபரில் உழவர் அமைப்பான கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி (கே.எம்.எஸ்.எஸ்) மற்றும் ஒரு சில சி.ஏ.ஏ எதிர்ப்பு அமைப்புகளின் ஆதரவுடன் இந்த புதிய கட்சி தொடங்கப்பட்டது. அதன்படி, நடந்து முடிந்த தேர்தலில் இக்கட்சி அசாமில் 18 இடங்களில் போட்டியிட்டது. அதில் அசாமின் வரலாற்று சிறப்பு மிக்க தொகுதியான சிப்சாகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் வேட்பாளர் சூரபி ராஜ்கோன்வாரியை எதிர்த்து போட்டியிட்டார் அகில் கோகாய். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகில், சிறையில் இருந்தபடியே இந்த தேர்தலை சந்தித்தார்.

சிறையில் இருந்ததால், பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் இருந்த அகில், தொகுதி மக்களுக்கு சிறையில் இருந்தபடியே மடல் எழுதி, அதன் வழியாக வாக்குகள் சேகரித்துவந்தார்.

தன்னுடைய மடல்களில், சுற்றி நிகழும் பிரச்சனைகளையும், மக்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளையும் மையப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். சிறைக்குள் இருந்த அவருக்காக, அவரது 84 வயதான தாய் பிரியாடா கோகோய் மற்றும் அகிலின் மனைவி கீதாஸ்ரீ தமுலி, உறவினர்கள், பிற குடும்ப உறுப்பினர்கள், ராய்ஜோர் தாள் கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரெல்லாம் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார்கள்.

இவர்களின் இந்த பிராச்சாரம், குறிப்பாக அவரது தாயார் பிரியோடா கோகோயின் உணர்ச்சிபூர்வமான பிரச்சாரம், இடதுசாரி வாக்குகளின் ஒருங்கிணைப்பு, உள்ளூர்மயமாக்கப்பட்ட சிஏஏ எதிர்ப்பு உணர்வுகள் ஆகியவை காரணமாக சிறையில் இருந்தபடியே பாஜகவை தோற்கடித்து வெற்றியை தன் வசமாக்கி இருக்கிறார் அகில். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சூரபி ராஜ்கோன்வாரியை 11,875 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறார். அகில் பெற்ற வாக்குகள் மட்டும் 57,219 வாக்குகள் ஆகும்.

தன்னுடைய வெற்றியை பற்றி கடிதம் எழுதியுள்ள அகில், அதில், “ஆளும் அரசாங்கத்திற்கு எதிராகச் சென்று, என்னை ஆதரித்த அசாம் மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பிராந்தியவாதம் வென்றது. மனிதநேயம் கொண்டவர்கள், பிராந்தியவாதத்தை ஆதரிக்க வேண்டும். பிராந்தியவாதத்தை வலுப்படுத்தும் செயல்முறை அசாமில் இருந்து தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஒரு புதிய யோசனையுடன் பிராந்தியவாதம் அசாம் மக்கள் மத்தியில் வளர்ச்சி பெறும்.

இந்த தருணத்தில் அமையவுள்ள புதிய அரசாங்கத்திற்கு நான் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன். அனைவருக்கும் கொரோனாவுக்கான இலவச தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்து மட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

மலையரசு