இந்தியா

‘ஜெய் பீம்’ Vs ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்- கர்நாடக கல்லூரிகளை அதிரச் செய்யும் ஹிஜாப் விவகாரம்!

‘ஜெய் பீம்’ Vs ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்- கர்நாடக கல்லூரிகளை அதிரச் செய்யும் ஹிஜாப் விவகாரம்!

webteam

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், அங்குள்ள ஒரு கல்லூரியில் இருதரப்பை சேர்ந்த மாணவர்களும் ஜெய் பீம் - ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள இரு கல்லூரிகளில் கடந்த சில வாரங்களாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு மற்றொரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருகட்டத்தில், ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில மாணவர்கள் காவித் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை அனுமதிப்பதில்லை என்ற முடிவை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் எடுத்துள்ளன. இதனால் இஸ்லாமிய மாணவிகளும், மாணவர்களும் தொடர் போாரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பான வழக்கை, கர்நாடாகா உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் இயங்கி வரும் ஐடிஎஸ்ஜி கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு தரப்பு மாணவர்களும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு மாணவர்களும் கோஷமிட்டனர். ஆதரவு தெரிவிக்கும் மாணவர்கள் 'ஜெய் பீம்' என்றும், எதிர்க்கும் மாணவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' எனவும் கோஷம் எழுப்பியவாறு கல்லூரியை சுற்றி வந்தனர். ஹிஜாப்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் காவி நிற சால்வை அணிந்து வரும் நிலையில், ஆதரவு தெரிவித்து ஜெய்பீம் கோஷமிட்ட மாணவர்கள் நீல நிற சால்வை அணிந்து இருந்தனர்.

அப்போது ஒரு சமயத்தில், இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்தது. இதனை கல்லூரி பேராசிரியர்கள் தலையிட்டு சமரசம் செய்தனர். இதேபோல, கர்நாடகாவில் உள்ள சிக்காபல்லாபூர், ஹாசன், மாண்டியா, விஜயபூரா மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலும் ஹிஜாப் விவகாரத்தை கையில் எடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனிடேயே, இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, "ஹிஜாப் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நாளை உத்தரவிடவுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை பொறுத்து இந்த பிரச்னையில் முடிவெடுக்கப்படும். அதுவரை அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது" என வலியுறுத்தினார்.