ஈஷா மையத்தின் நிறுவனரும் ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான ஜக்கி வாசுதேவ், சமீபத்தில் ஈஷா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அவருக்கு சில நாட்களாக தீராத தலைவலி இருந்துள்ளது. தலைவலியுடனே சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். கடுமையான தலைவலி மற்றும் உடல்நல குறைவால் ஜக்கி வாசுதேவ்அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டார். மார்ச் 15 ஆம் தேதி அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருந்தது கண்டறியப்பட்டது
இதையடுத்து மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு உடல்நலன் சீராகி முன்னேற்றம் அடைந்து வருகிறார். இது குறித்து , மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரி கூறுகையில், “நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம். ஆனால் உங்களை நீங்களே குணப்படுத்திக் கொள்கிறீர்கள் என அவரிடம் கேலி செய்தோம். சத்குரு நன்றாக குணமடைந்து வருகிறார். அவரது மூளை, உடல், அனைத்து உறுப்புகளும் இயல்பாக செயல்படுகிறது. மேலும் அவரது உடல்நிலை எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் அடைந்து வருவகிறார்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ஜக்கி வாசுதேவ், “அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர்கள், என்னோட மண்ட ஓட்ட கட் பண்ணி எதாச்சும் இருக்கானு தேடிப் பார்த்தாங்க.. ஆனா அங்க ஒன்னும் இல்லை. காலியாக இருந்தது. முயற்சியை கைவிட்டுவிட்டு மீண்டும் இணைத்துவிட்டனர். மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜக்கி வாசுதேவ்க்கு போன் மூலம் நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விரைவில் அவர் குணமடைய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.