இந்தியா

பாஜக தேசிய தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு

பாஜக தேசிய தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு

Rasus

பாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக ஜெ.பி.நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னாள் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும், கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜெ.பி.நட்டா பாஜக செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனிடையே அவரை தேசிய தலைவராக நியமிப்பதற்கான நடைமுறைகள் அண்மையில் தொடங்கின. அவரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்ய மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா அலுலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஜெ.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், ஒருமனதாக ஜெ.பி.நட்டா தேர்வானதும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

ஜெ.பி.நட்டா தேசிய தலைவர் பதவிக்கு உகந்தவர் என்றும், அவரது இந்த உயர்வு கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெ.பி.நட்டா தனது கல்லூரி காலங்களில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் பணியாற்றியவர். பின்னர் பாரதிய ஜனதாவின் இளைஞர் அணியில் சேர்ந்து படிப்படியாக பல்வேறு பதவிகளை வகித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தபோது, ஜெ.பி.நட்டா அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.