இந்தியா

ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்தாரா ஆளுநர்? - மேற்கு வங்கத்தில் அரங்கேறும் காட்சிகள்!

sharpana

பாஜக தலைவர் நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தேர்தல் களமான மேற்கு வங்கத்தில் அரசியல் பரபரப்புக் காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

 கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பொதுக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது பாஜக தலைவர் நட்டாவின் கான்வாய் கற்களால் தாக்கப்பட்டதை அடுத்து, ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் டி.எம்.சி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றி வருகிறது. 

 உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் எனப் பலர் ஆளும் கட்சியை நோக்கி மோதலை வெளிப்படுத்தி வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா இந்த தாக்குதல் "ஜோடிக்கப்பட்டது" என்ற வாதத்தை முன்வைத்து வருகிறார். 

 நட்டா கார் மட்டுமல்ல, பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்டவர்களின் பல கார்கள்மீது கற்களால் தாக்குதல் நடந்ததே மோதலுக்கான காரணம். இதில் விஜயவர்கியா, முகுல் ராய் உள்ளிட்டோருக்கு சிறு காயம் ஏற்பட்டதாகவும் பாஜக கூறி வருகிறது. இதனால் மாநிலத்தில் ஒருவிதமான அரசியல் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. 

மம்தா - பாஜக வார்த்தைப் போரைத் தாண்டி மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் தலையீடு இந்த அரசியல் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

 இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, "நேற்று நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை. இச்சம்பவம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதற்காக வெட்கப்படுகிறேன். ஆட்சியில் இது மிகவும் வேதனையான நாள். முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த அறிக்கையை நான் மிகவும் தீவிரமாக கவனிக்கிறேன். அவர் அவருடைய வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். 

 அரசியல் சித்தாந்தங்களுக்கும் அறிக்கைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. அதை மீறக்கூடாது. நாம் எங்கு செல்கிறோம்? நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? மேற்கு வங்க முதல்வர் மேடம், தயவுசெய்து நெருப்புடன் விளையாட வேண்டாம்" என மேற்கு வங்க ஆளுநர் தங்கர் முன் எப்போதும் இல்லாத அளவு ஆளும் மம்தா அரசு மீது கனலைக் கக்கினார். 

 இதற்கு முன்னதாக, தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் அரங்கேறிய காட்சிகள் மம்தா அரசு மீது ஆளுநர் கொண்டுள்ள கோபம் குறித்து தெள்ள தெளிவாக்கியது. நட்டா மீதான தாக்குதலுக்கு பின் மாநில டிஜிபி மற்றும் தலைமை செயலாளரை வரவழைத்த ஆளுநர் தங்கர், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியதுடன் கடும் கண்டனத்தை அவர்களிடம் பதிவு செய்ததாக மேற்கு வங்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

 இந்தச் சந்திப்புக்கு பின் தொடர்ச்சியான ட்வீட்களை பதிவிட்ட ஆளுநர் தங்கர், "நட்டாவின் கான்வாய் மீதான தாக்குதல் குறித்து எந்த தகவலையும் இந்த இருவரும் எனக்குத் தரவில்லை. அவர்களின் தொடர்ச்சியான பிற்போக்கு மனப்பான்மை மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரங்கள் தோல்வியடைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.

 ஆளும் கட்சி மற்றும் காவல்துறையின் ஆதரவுடன் இந்தத் தாக்குதல் நடந்த செய்தி குறித்து நான் கவலைப்படுகிறேன். நட்டா வருகைக்கு முன்னரே இதுபோன்ற தாக்குதலை ஏற்கெனவே சந்தேகித்து பாதுகாப்பை பலப்படுத்த சொன்னேன். முதல்வருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதினேன். இது குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் சட்டம் மீறப்பட்டது. 

மாநில அரசியலமைப்புத் தலைவராக, உங்களைப் பற்றி (மம்தா அரசு) வெட்கப்படுகிறேன். உங்கள் கடமைகளை சரியாக செய்யாததே இந்தச் சம்பவம் நடைபெற காரணம். நட்டா கான்வாய் மீதான தாக்குதல் ஜனநாயகம் மீதான தாக்குதல். இதற்கு மம்தா மன்னிப்பு கேட்க வேண்டும். ஜனநாயகத்தில் பேச அனைவருக்கும் உரிமை உண்டு. நேற்றைய தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான ஒரு கறை.

 இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பது எனது பொறுப்பு. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் அரசியலமைப்பு வரம்புகள் மீறப்படுகின்றன. மம்தா அரசியலமைப்பு பாதையில் இருந்து விலகியதால் எனது பொறுப்பு தொடங்குகிறது" என்று புதிர் போட்டு பேசியவர், "அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக செயல்படுகிறார்கள். அத்தகைய 21 நபர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. விரைவில் இதன் விவரங்களை முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பகிர்ந்து கொள்வேன்" என்று பேசினார். வெறும் பேச்சோடு நில்லாமல், மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார் ஆளுநர். 

 ஆளுநரின் அறிக்கையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், அம்மாநில டிஜிபி மற்றும் தலைமை செயலாளரை டிசம்பர் 14 அன்று ஆஜராக சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், நட்டா வருகையின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள், சூழ்நிலைகள் மற்றும் அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசாங்கத்திடம் அறிக்கை கோரியுள்ளது. இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று பேச்சுக்களும் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்: