உலகின் அதிக எடை கொண்ட பெண்ணாக அறியப்பட்ட இமான் அகமது தங்கள் குழந்தை எனவும், அவர் இந்தியாவை விட்டு சென்றது தவறானது எனவும் மும்பையை சேர்ந்த மருத்துவர் தெரிவித்தார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் அகமது பிறக்கும் போது 5 கிலோவாக இருந்தார். பின்னர் வயது ஆக ஆக அவரது எடை அதிக அளவில் கூடிக்கொண்டே சென்றது. கடந்த 2014-ம் ஆண்டு அவர் 300 கிலோ எடையை எட்டிய அவருக்கு அடுத்த இரண்டு வருடத்திற்குள் எடை 500 கிலோவை எட்டியது. இதனால் உலகின் அதிக எடை கொண்ட பெண் என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது. உடல் எடையை குறைக்கவும் இதர உடல் உபாதைகளை சரிசெய்யவும் பல்வேறு இடங்களில் அவர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வந்தார். இருப்பினும் பலனளிக்காததால், மும்பையில் உள்ள மருத்துவமனையை அணுகினார்.
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் அவருக்கு நல்ல பலன் கிடைத்தது. சுமார் 240 கிலோ குறைந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து இமான் குடும்பம் அபுதாபி சென்றது. அங்கும் 20 மருத்துவர்கள் கண்காணிப்பில், இமான் அகமது சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுநீரகம் மற்றும் இதயக் கோளறால் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில் மும்பை மருத்துவமனையில் இமான் அகமதுவிற்கு சிகிச்சை அளித்த பிரிவில் உள்ள மருத்துவர் ஒருவர் கூறும்போது, “இமான் அமகது இந்தியாவை விட்டு சென்றது தவறானது. அவர் இங்கு சிகிச்சை பெற்று வந்த வரை, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றமே காணப்பட்டு வந்தது. நாங்கள் நல்லபடியாக சிகிச்சை அளித்த போதிலும், எங்களது முயற்சியை நம்பாமல் அவர்கள் அபுதாபி சென்றனர். அது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இமான் அகமது எங்கள் வீட்டு குழந்தை. இமான் அகமது உயிரிழந்தது என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த கவலையை விவரிக்க வார்த்தையே இல்லை” என்றார்.