இந்தியா

ஐடி ரெய்டா? பாஜக சோதனை என்றே சொல்லலாம் - பீகார் ஆர்ஜேடி எம்.பி கிண்டல்

ஐடி ரெய்டா? பாஜக சோதனை என்றே சொல்லலாம் - பீகார் ஆர்ஜேடி எம்.பி கிண்டல்

webteam

அமலாக்கத் துறை, வருமான வரித் துறை அல்லது சி.பி.ஐ. சோதனை என்று கூறுவதைவிட பாஜகவின் சோதனை என்று சொல்வதே சரியாக இருக்கும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்.பி மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, பீகாரில் பணி நியமனங்களில் நிலங்களை லஞ்சமாகப் பெற்றது தொடர்பான வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இக்கட்சி ஆதரவுடன் ஆட்சியமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற நிலையில் இந்தச் சோதனை நடந்தது.

இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்துப் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்.பி மனோஜ் ஜா, இதனை அமலாக்கத் துறை, வருமான வரித் துறை அல்லது சி.பி.ஐ. சோதனை என்று கூறுவதைவிட பாஜகவின் சோதனை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த அமைப்புகள் அனைத்தும் பாஜகவிற்கு கீழ் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்றார். மேலும் இந்தச் சோதனையின் மூலம் எம்.எல்.ஏக்களை மிரட்டி வாங்கிவிடலாம் என பாஜக எண்ணுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.