இந்தியா

‘உலகின் மூத்த மொழி தமிழ்'to‘தமிழகத்தில் சீன அதிபர்’: பிரதமர் பேட்டியின் முக்கிய அம்சங்கள்

‘உலகின் மூத்த மொழி தமிழ்'to‘தமிழகத்தில் சீன அதிபர்’: பிரதமர் பேட்டியின் முக்கிய அம்சங்கள்

webteam

உலகின் மிக மூத்த மொழி தமிழ் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி இன்று பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் உண்மையான நாட்டின் வளர்ச்சி என்பதை தீர்க்கமாக நம்புகிறவன் நான். அதனால்தான், அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்த்து வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்ல நான் முயற்சிக்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தாரக மந்திரம். ஆனால், இங்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் வேற்றுமையை கையில் எடுத்து ஒருவருக்கு ஒருவர் எதிராக பயன்படுத்துகின்றனர். அற்ப அரசியல் லாபத்துக்காக அவர்கள் இதனை செய்வது துரதிருஷ்டவசமானது. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

முதலில் முதல்வர் - பின்னர்தான் பிரதமர்

மத்திய பாஜக அரசு, மாநிலங்களின் நலன்களையும், அவற்றின் தேவையையும் புரிந்து கொள்ள மறுப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால், அது உண்மை அல்ல. மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை அடிப்படை மந்திரமாக கொண்டு செயல்படும் கட்சி பாஜக. முதலமைச்சராக நீண்டகாலம் இருந்து பின்னர் பிரதமர் ஆனவன் நான். எனவே, மாநிலங்களின் தேவை என்ன, அவற்றின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நான் நன்கு அறிவேன்.

தமிழகத்தில் சீன அதிபர்...

மாநிலங்களை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே, இந்தியாவுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களை ஒவ்வொரு மாநிலத்திற்கும் அழைத்து செல்கிறேன். சீன அதிபரை தமிழகத்துக்கும், பிரான்ஸ் அதிபரை உத்தரபிரதேசத்துக்கும் அழைத்து சென்றிருக்கிறேன். இதற்கு முன்பு உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியை தாண்டி எங்கும் சென்றது கிடையாது. நாட்டு மக்களை துண்டாடுவதற்காக எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றன. ஆனால், அவர்களின் வலையில் இந்திய மக்கள் சிக்க மாட்டார்கள்.

மூத்த மொழி தமிழ்

ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியில் மேற்கோள்கள் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன். உலகின் மிக மூத்த மொழியாக தமிழ் திகழ்வது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.