இஸ்ரோ pt
இந்தியா

இரண்டு மடங்கு விரிவடைந்த இமயமலை ஏரிகள்.. இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்

வெப்பநிலை உயர்வால் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பரப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செயற்கைகோள் தரவுகளில் தெரியவந்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர்: பால வெற்றிவேல்

வெப்பநிலை உயர்வால் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பரப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செயற்கைகோள் தரவுகளில் தெரியவந்துள்ளது. பனிப்பாறை ஏரி உடைப்புகளால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இஸ்ரோ எச்சரித்துள்ளது.

இமயமலையில் ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது. இஸ்ரோ வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படத்தில் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் நீர்பரப்பு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக 1984 ஆம் ஆண்டிலிருந்து 2023 வரை இஸ்ரோவால் அனுப்பப்பட்ட புவி நோக்கு செயற்கைக்கோள்கள் மூலமாக வரைபட தரவுகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இமயமலையில் உள்ள 601 ஏரிகள் இரண்டு மடங்குக்கு மேல் விரிவடைந்திருப்பதும், 10 ஏரிகள் 1.5 முதல் 2 மடங்கு வரை அதிகரித்திருப்பதும் இஸ்ரோ ஆய்வில் தெரியவந்துள்ளது. 65 ஏரிகள் 1.5 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2016-17 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 10 ஹெக்டேருக்கும் அதிகமான 2,431 ஏரிகளில், 676 பனிப்பாறை ஏரிகள் 1984 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்துள்ளதாகவும் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா நதிகளுக்கான மூலமாக விளங்கும் ஏரிகளின் பரப்பும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ளது. இமயமலைப் பகுதியில் உள்ள நதிகளுக்கு இந்தப் பனிப்பாறைகள் ஆதாரங்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன.

GLOFs

இந்தப் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகுவதால் "பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம்" (GLOFs) ஏற்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் என்பது சாதாரண வெள்ளத்தை விட பல மடங்கு அதிக சீற்றத்தோடு வரும் என்பதால் மிகப்பெரிய அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

பனிப்பாறை வெடிப்பு வெள்ளம் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களை பெரும் அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது.