இஸ்ரோ விஞ்ஞானி - கார்த்திக் கன்சால் Twitter | @kartikcse271
இந்தியா

4 முறை UPSC தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி இஸ்ரோ விஞ்ஞானி..ஆனாலும் தொடர்ந்து மறுக்கப்படும் பணி! ஏன்?

தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர், நான்கு முறை யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்ற போதும், அவருக்கு சிவில் அதிகாரியாக சேவை செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. ஏன்? விரிவாக பார்ப்போம்...

ஜெனிட்டா ரோஸ்லின்

14 வயதிலிருந்தே தசை சிதை நோயால் பாதிக்கப்பட்டவர் கார்த்திக் கன்சால். அப்போதிருந்து இப்போதுவரை சக்கர நாற்காலியில்தான் இயங்குகிறார் இவர். தன் உடல் முடங்கியபோதும்கூட, மனதை முடங்கவிடவில்லை கார்த்திக்.

ஆம், வாழ்க்கையின் மீதமுள்ள நாட்களை தன்னம்பிக்கையோடு கழிப்பதில் அவர் சமரசம் ஏதும் செய்துகொள்ளவில்லை. தனது தொடர் கடின உழைப்பால் ஐஐடி ரூர்க்கி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியாக தேர்ச்சி பெற்ற அவர், தற்போது இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

கார்த்திக் கன்சால்

எப்படியாவது சிவில் சர்வீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதுதான் இவரின் லட்சியமாக உள்ளது. இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணி பெற்றபோதிலும், குடிமைப்பணி தேர்வுக்காக தன்னை தயார் படுத்திய கார்த்திக், அதில் வெற்றியும் அடைந்தார். அதுவும் ஒரு முறை, இரண்டு முறை அல்ல.... நான்கு முறை வெற்றிக்கனியை தனதாக்கி கொண்டிருக்கிறார் கார்த்திக். இதன்படி,

2019ல் 813-வது ரேங்க்,

2021ல் 271-வது ரேங்க்,

2022ல் 784-வது ரேங்க்,

2023 ல் 829-வது ரேங்க்

என தேர்ச்சி அடைந்திருக்கிறார் கார்த்திக். இருப்பினும், இவருக்கு சிவில் அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2021-ல் 272, 273 ரேங்க் பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரியாக பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 271-வது ரேங்க் பெற்ற கார்த்திக்கிற்கு ஐஏஎஸ் பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. லோகோமோட்டார் இயலாமை* பிரிவில் முதலிடம் பெற்றிருந்தாலும், கார்த்திக்கிற்கு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது பேசுபொருளானது. அவருக்கு பின் ரேங்கில் இருந்தவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இவருக்கு மறுக்கப்பட்டது, கடும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அதுவும் UPSC Civil Services Exam 2021 அறிவிப்பின்படி அச்சயமத்தில் மொத்தம் 712 சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருந்தன. அதில் 22 இடங்கள் PWBD (Persons with Benchmark Disabilities) பிரிவை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டும் இருந்தது. இந்த PWBD பிரிவில் முதலிடத்தில் இருந்தார் கார்த்திக். ஆனால் அவருக்கு ஐஏஎஸ் பணி ஒதுக்கப்படவில்லை, பதிலாக அவருக்கு அடுத்த ரேங்க் எடுத்தவர்கள் ஐஏஎஸ் ஆனார்கள்.

𝗞𝗮𝗿𝘁𝗶𝗸 𝗞𝗮𝗻𝘀𝗮𝗹 UPSC Rank

* லோகோமோட்டார் இயலாமை என்றால் என்ன?

இந்த PWBD பிரிவில் பெருமூளை வாதம், தொழுநோய், உயரம் குறைவாக இருப்பது, அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் மற்றும் தசைநார் சிதைவு போன்ற லோகோமோட்டர் குறைபாடுகளுக்கான ஆறு நிலைகளும் அடங்கும். அதாவது உடல் மூட்டு இயக்கத்தை கணிசமாகக் கட்டுப்படுத்தும் பாதிப்புகள் அனைத்தும் லோகோமோட்டர் இயலாமை எனப்படும்.

கார்த்திக் ஏன் ஐஏஎஸ் அதிகாரியாக முடியவில்லை?யுபிஎஸ்சி சொன்னது என்ன?

மேற்சொன்னவை, பொதுவான அனைத்துவகை சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் பொருந்தும். இதுபோக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கென சில உடல் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில், தசைநார் பாதிப்பு உள்ளவர்களுக்கான ஒதுக்கீடு இல்லை. இதனால்தான் கார்த்திக்கிற்கு ஐஏஎஸ் பதவி ஒதுக்கப்படவில்லை எனக்கூறப்பட்டது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், கடந்த 4 வருடங்கள் கார்த்திக் யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றபோதும், ஒருமுறை கூட அவருக்கு சிவில் சர்வீஸ் சேவைக்கான எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை. இதை அவரே தன் எக்ஸ் பக்கத்தில் வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார்.

யுபிஎஸ்சி தரப்பில் 2021 தேர்ச்சிக்குப்பின் கார்த்திக்கிடம் “ஐஏஎஸ் பதவிக்கு பதிலாக, இந்தியா வருவாய் சேவை (சுங்கம் மற்றும் கலால் வரி) குரூப் 1 பிரிவின் கீழ் வருவது அல்லது இந்திய வருவாய் சேவையை (வருமான வரி) நீங்கள் தேர்வு செய்யலாம்” என்றுள்ளது. இந்த இடத்தில் 2019-ல் கார்த்திக்கிற்கு நடந்தது கவனிக்கத்தக்கது.

2019-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் கார்த்திக் 813-வது ரேங்க் பெற்றபோதிலும், லோகோமோட்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான 15 காலியிடங்களில், 14 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. மீதமுள்ள ஒரு காலியிடத்தில் இவர் பணியமர்த்தப்பட்டிருக்கலாம் என்றபோதிலும், அது நடக்கவில்லை. ஆக, 2019-ல் மொத்தமாகவே கார்த்திக்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 2021-ல் அந்த வாய்ப்பு மறுப்பானது ஐஏஎஸ் உட்பட ஒரு சில பதவிக்கு என்றானது.

தொடர்ச்சியான இந்த மறுப்புகளுக்கு, கார்த்திக்கிற்கு கிடைத்த மருத்துவச் சான்றிதழ் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மருத்துவ வாரியம் சான்றிதழ்:

𝗞𝗮𝗿𝘁𝗶𝗸 𝗞𝗮𝗻𝘀𝗮𝗹 medical report

கார்த்திக்கின் மருத்துவச் சான்றிதழில் அவருக்கு 60% இயலாமை இருப்பதாகவே அவர் குறிப்பிடப்பட்டிருந்தார். ஆனால் AIIMSல் உள்ள மருத்துவக் குழு கார்த்திக்கிற்கு 90% தசைநார்ச் சிதைவு எனச் சான்றளித்தது.

அதனால் ஐஏஎஸ், ஐஆர்எஸ் போன்ற பதவிகளிலுள்ள அதிகாரிக்கு தேவையான குறிப்பிடத்தக்க உடல் வரம்புகள் இவருக்கு இல்லை எனக் கூறப்பட்டது. அதேநேரம் கார்த்திக்கின் பார்ப்பது, கேட்டது, பேசுவது, பிறரை தொடர்புகொள்வது, வாசிப்பது மற்றும் எழுதுவது போன்றவை தொடர்பாகவும் எய்ம்ஸ் சான்றிதழை வழங்கியது.

அதைக்குறிப்பிட்டு மத்திய குறை தீர்க்கும் போர்ட்டலில் இருந்து கார்த்திக்கிடம் “நீங்கள் பெற்ற ரேங்கிற்கு ஏற்றவாறு உங்களுக்கு பொருந்தக் கூடிய சேவைகள் எதுவும் இல்லை” எனக்கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி குப்தா ஊடகங்களில் தெரிவிக்கையில், “கார்த்திக்கிற்கு தசைநார் தொடர்பான குறைபாடு இருந்தபோதிலும், தேர்வுகளுக்கு மற்றவர்களை பயன்படுத்தாது, தாமாக முன்வந்து அவர் எழுதியிருக்கிறார். சிறுவயதில் இருந்தே அவர் சுயமாக எழுதும் பயிற்சியை பெற்றிருக்கிறார். ஆகவே, அவருக்கு நிச்சயம் ஐஏஎஸ் அதிகாரியாக பணி கிடைக்கவேண்டும், அதுவே அவருக்கு கிடைக்கும் நீதி” என்றுள்ளார்.

சட்டப்போராட்டம்

இந்நிலையில், தற்போது வரை இதற்கான தனது சட்டப்போராட்டத்தை கார்த்திக் தொடர்ந்து கொண்டுதான் வருகிறார். அதேநேரம், Department of Personnel and Training (DoPT) இவருக்கு எந்த இடத்தையும் வழங்கவில்லை.

எனவே, தனது போராட்டத்தை Central Administrative Tribunal (CAT) ல் தொடுத்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் இதுகுறித்து விசாரணை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்பி இருக்கும் கார்த்திக், “இதில் வெற்றிப்பெறுவதன் மூலம், என்னை போன்றவர்களும் சிவில் சர்வீஸில் சாதிக்க முடியும் என நிரூபிக்க நினைக்கிறேன். மற்றபடி தற்போது வழக்கு நிலுவையிலுள்ளதால் என்னால் எதுவும் கருத்துகூற முடியாது” என்றுள்ளார் நம்பிக்கையோடு.