சந்திரயான் 3 pt desk
இந்தியா

நிலவை தொடர்ந்து அடுத்தடுத்து எங்கெல்லாம் இஸ்ரோ ஆய்வுசெய்ய போகிறது தெரியுமா?

சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தரையிறங்கிவிட்டது. நிலவை தவிர வேறு எந்தெந்த கோள்களை ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது... விரிவாக காணலாம்.

webteam

இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் சந்திரனோடு நின்றுவிடாமல் சூரியன் மற்றும் செவ்வாய், வியாழன் கோள்களுக்கும் நீள்கிறது.

ஆதித்யா L 1 (சூரியன்)

அந்தவகையில் பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் இருந்தாலும் அவற்றின் மையப் புள்ளியாக விளங்குவது சூரியன்தான். அதை ஆய்வு செய்யும் சவாலான முயற்சியில் இந்தியாவும் களமிறங்க உள்ளது.

mangalyaan

ஆதித்யா எல் 1 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள விண்கலம் சூரியனின் லெக்ராஞ்ச் பாயின்ட் ஒன் என்ற சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவந்து ஆய்வு செய்யும். இதற்காக ஆதித்யா விண்கலம் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணிக்க உள்ளது. சூரியனின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பதே ஆதித்யா விண்கலத்தின் பணியாக இருக்கும். இயற்கை இடையூறுகளை கடந்து தங்குதடையின்றி சூரியனை தொடர்ச்சியாக கண்காணிக்கும் வகையில் உள்ளதுதான் இத்திட்டத்தின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஆதித்யா எல் ஒன் விண்கலம் இன்னும் சில வாரங்களில் ஏவப்பட உள்ளது.

மங்கள்யான் (செவ்வாய் கோள்)

செவ்வாய் கோளை ஆய்வு செய்யும் திட்டத்தை மங்கள்யான் என்ற பெயரில் இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. இதில், முதலாவதாக செவ்வாய் கோளை சுற்றிவந்து ஆய்வு செய்யும் மங்கள்யான் ஒன் என்ற விண்கலம் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏவப்பட்டது. 2014 செப்டம்பர் முதல் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்த மங்கள்யான் ஒன் 8 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்தது. 2022ஆம் ஆண்டு மங்கள்யானுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. 6 மாத பணிக்காலமே கொண்ட மங்கள்யான் 8 ஆண்டுகள் உழைத்தது இஸ்ரோ விஞ்ஞானிகளின் பணித்திறனை காட்டுவதாக உள்ளது.

Gaganyaan

அடுத்து மங்கள்யான் 2 விண்கலத்தை 2024ஆம் ஆண்டு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் செவ்வாய் கிரகத்தை பற்றி மேலும் துல்லியமாக அறிய நவீன கேமராக்கள், ரேடார்கள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இதுவும் மங்கள்யான் ஒன்-ஐ போல செவ்வாயை சுற்றி வந்து ஆய்வு செய்யும் விண்கலனாகவே இருக்கும். பூமிக்கு அப்பால் உள்ள விண்வெளியை ஆராய ககன்யான் என்ற பெயரிலும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இதில் முதல்படியாக ககன்யான் ஒன் என்ற பெயரில் ஆளில்லா விண்கலத்தை விண்வெளிக்கு இஸ்ரோ அடுத்தாண்டு அனுப்ப உள்ளது.

விண்வெளியில் மனிதர்கள்?

இதையடுத்து 3 பேருடன் விண்வெளிக்குச் செல்லும் திட்டத்தையும் இஸ்ரோ செயல்படுத்த இலக்கு வைத்துள்ளது. இதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

சுக்ரயான் (வியாழன் கிரகம்)

சந்திரன், சூரியன், செவ்வாயை தொடர்ந்து வியாழன் கிரகத்தையும் இஸ்ரோ ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக சுக்ரயான் என்ற பெயரில் விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது