இந்தியா

அரசுப்பள்ளி மாணவிகளின் ராக்கெட்டுடன் மீண்டும் எழுந்த SSLV.. விண்ணில் ஏவிய இஸ்ரோ..!

அரசுப்பள்ளி மாணவிகளின் ராக்கெட்டுடன் மீண்டும் எழுந்த SSLV.. விண்ணில் ஏவிய இஸ்ரோ..!

JananiGovindhan

புவிநோக்கு செயற்கைக்கோள் உட்பட 3 செயற்கைக்கோள்களுடன் SSLV - D2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்தியா அனுப்பிய முதல் SSLV திட்டம் தோல்வியடைந்த நிலையில், தற்போது 450 கிலோமீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி சரியாக காலை 9:18மணிக்கு இந்த ராக்கெட்டானது விண்ணில் ஏவப்பட்டது.

SSLV - D2 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு இரண்டு நிமிடங்களில் முதல் அடுக்கு ராக்கெட் பாகத்தில் இருந்து பிரிந்து கடலில் விழுந்தது. அதன் தொடர்ச்சியாக ஆறாவது நிமிடம் எட்டாவது நிமிடத்தில் அடுத்தடுத்த அடுக்குகள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து விழுந்தன. ராக்கெட் ஏவப்பட்டு 13வது நிமிடத்தில் உந்துவிசை இயந்திரம் மூலம் மூன்று செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்துவதற்கான பணியை தொடங்கின.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுப்பப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி D1 ராக்கெட்டின் உந்துவிசை அமைப்பில் ஏற்பட்ட பிரச்னை திட்டம் தோல்விக்கு காரணமாக அமைந்த நிலையில், இந்த முறை அந்தப் பிரச்னைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு திட்டமிட்டபடி 450 கிலோமீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சரியாக 14 நிமிடங்களில் இஒஎஸ் - 07, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் 750 மாணவிகள் உருவாக்கிய ஆசாதி சாட்- 2 உட்பட 3 செயற்கைக் கோள்களும் 450 கிலோ மீட்டரில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.