இன்சாட்-3டிஎஸ் ட்விட்டர்
இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இன்சாட்-3டிஎஸ்.. விஞ்ஞானிகளுக்கு பாராட்டு!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

Prakash J

வானிலை மாற்றத்தை துல்லியமாக ஆய்வு செய்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. அது, ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று, மாலை 5.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப் பணியான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்குத் தொடங்கியது. விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பயணித்த நிலையில் விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து, விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்துகளை தெரிவித்தார். செயற்கைக்கோளின் செயல்பாடு திருப்தியாக உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம். அதேபோல புயல் கரையை கடக்கும் இடத்தை சுமார் 20 கிலோ மீட்டர் துல்லியத்தில் கண்டறிய முடியும். மேலும், பேரிடர் காலங்களில் காற்றில் ஏற்படும் மாற்றங்கள், புயலின் மாற்றங்களை துல்லியமாக அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ’அக்பரும் சீதாவும் ஒரே இடத்திலா?’ - அதிர்ச்சியடைந்த விஷ்வ ஹிந்து அமைப்பு; கோர்ட்டில் வழக்கு!