இந்தியா

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் ஏன்? -  இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் ஏன்? -  இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்

webteam

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன. இங்கிருந்தே பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்த மத்திய அரசு அதற்கு தகுந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது. 

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பதில் அளித்தார். அதில் ''தமிழகத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு முன்மொழிந்துள்ளது. அதற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார். இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். 

அதில், ''தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலை தொடங்கியுள்ளது. நேராக தெற்கு நோக்கி ராக்கெட்டை ஏவ வேண்டும் என்றால், ஏவுதளம் தமிழத்தின் மையப்பகுதி கடற்பகுதியில் இருந்தால் தான் சாத்தியப்படும். அப்படிபார்த்தால் குலசேகரப்பட்டினம் சரியாக இருக்கும். தற்போது ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து நேராக தெற்கு நோக்கி ராக்கெட்டை ஏவ முடியவில்லை. 

குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க மற்றொரு முக்கிய காரணம் நெல்லை மாவட்ட மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையம். இது பிஎஸ்எல்வியின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலை இஞ்சின்களை ஒருங்கிணைக்கிறது. ஏவுதளம் அமைக்க  தூத்துக்குடியில் 2300 ஏக்கர் தேவைப்படுகிறது. இது தற்போதைய ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தை விடவும் சிறியதாகத்தான் இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.