முன்னாள் அமைச்சர் செந்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். தொடர்ச்சியாக அவரது ஜாமீன் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் தெரிவித்த ஒரு கருத்தை அடுத்து செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வந்தன. உச்சநீதிமன்றம் சொன்னது என்ன அதற்கும் செந்தில்பாலாஜி வழக்கிற்கு என்ன சம்பந்தம் என்பதை இங்கே காணலாம்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் பிரேம் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சஞ்சீவ் கண்ணா மற்றும் திபன்கர் தட்டா அமர்வு, ”அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்பட்டவர்களை கால வரையின்றி சிறையில் வைக்கும் முறைக்கு கடும் கண்டனம்.
90 நாட்களுக்குள் வழக்கின் விசாரணையை முடிக்காவிடில், சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் பெற இருக்கும் உரிமையை அமலாக்கத்துறை தடுக்கக்கூடாது. சட்டப்பூர்வமான ஜாமீன் உரிமையை தடுக்கும் குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்யக்கூடாது” என்று குட்டு வைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்து தமிழகத்தில் அமைச்சராக இருந்து அமலாக்கத்துறையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கும் பொருந்தும் என்று சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல அவர் போல கைது செய்யப்பட்டு காரணமே சொல்லாமல், விசாரணையையும் தொடங்காமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பொருந்தும் விஷயமாக இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. தொடர்ந்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு, வழங்கப்பட்டது.
இதையடுத்து, இதயப்பிரச்னை காரணமாக பைப்பாஸ் சர்ஜரி செய்யப்பட்டு, பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வேண்டும் என்று அவர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறையினர் தொடர்ந்து நீதிமன்றத்தில் முறையிட்டு வருகின்றனர். ஜாமீனில் வெளியே வந்தால், சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்ற குற்றச்சாட்டை அமலாக்கத்துறை முன்வைத்து வருகிறது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி தரப்பு தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்து வரும் நிலையில், உயர்நீதிமன்றமோ இருமுறை இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. மறுபுறம் கைதாகி 250 நாட்களுக்கும் மேலாக சிறையிலேயே இருக்கும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலும் தொடர்ந்து 27வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரின் நீதிமன்ற காவல் இன்றோடு முடியும் நிலையில், சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த விவகாரத்தில் வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்பட்டவர்களை காவலில் வைக்கும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியனிடம் பேசினோம். அவர் கூறியதாவது, ”சாதாரண குற்ற வழக்கில் சார்ஜ் ஷீட் ஃபைல் செய்கிறீர்களோ இல்லையோ 60 நாள் அல்லது 90 நாட்களில் ஜாமீன் வழங்க வேண்டும். ஜார்ஜ் ஷீட் பைல் செய்தால்தான் விசாரணை தொடங்கும்.
அதைவிட்டுவிட்டு, இன்னும் இன்னும் விசாரணை செய்கிறோம் என்று அமலாக்கத்துறையினர் தள்ளிப்போட்டுகொண்டே இருக்கிறார்கள். இவை அனைத்தையும் தாண்டி சட்டமும் ஒரு கொடூரமான சட்டமாக இருக்கிறது. இதனால்தான், விசாரணையை தொடங்காமல் காவலை நீட்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம்(Prevention of Money Laundering Act, 2002) வந்த பிறகு சுமார் 5000 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 24 வழக்குகளில்தான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கை காரணம் காட்டி எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையாகவே இது இருக்கிறது. இந்நிலையில், அமலாக்கத்துறையினர் தொடர்ந்து தாமதப்படுத்தினால் நாங்கள் ஜாமீன் தருவோம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த கருத்து செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல. அவரைப்போன்று கைதாகி இருக்கும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். விசாரணைக்கு அழைத்தால், ஏன் அழைக்கிறோம் என்று கூறக்கூடாது. கைது செய்யும் வரை காரணமே சொல்லத்தேவையில்லை. நீதிபதிக்கு மட்டும் சொன்னால் போதும். நோட்டீஸ் கொடுப்பதும் ஏன் என்று கூறக்கூடாது. நான் கூப்பிட்டால் நீ வந்தாக வேண்டும் என்று விதிகள் இருக்கின்றனர். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கொண்டு வந்த சட்டத்தை, அரசியல் பழிவாங்கும் செயலாக பாஜக பயன்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டனம் படி, நடவடிக்கை எடுத்தால் செந்தில் பாலாஜி போன்றவர்கள் ஜாமீனில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
இருப்பினும் இன்றைய வழக்கு விசாரணைக்கு பிறகே செந்தில்பாலாஜி ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.