இந்தியா

என்னது ட்ரெயினையே ஹைஜாக் பண்ணிட்டாங்களா?-கதிகலங்கிப்போன பாசஞ்சர்ஸ்!

என்னது ட்ரெயினையே ஹைஜாக் பண்ணிட்டாங்களா?-கதிகலங்கிப்போன பாசஞ்சர்ஸ்!

JananiGovindhan

கர்நாடகாவின் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டுவிட்டது எனக் குறிப்பிட்டு க்ருஷ்ணா பெஹெரா என்பவரின் ட்விட்டர் பதிவால் ரயில்வே அதிகாரிகள் உட்பட பலர் தரப்பிலும் பரபரப்பு தொற்றியிருக்கிறது.

கடந்த ஞாயிறன்று சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மஜ்ரி - சிதாஃபல் மண்டி சந்திப்பு இடையே திசை திருப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து எந்த அறிவிப்பும் ரயில்வே தரப்பிடம் இருந்து தெரிவிக்கப்படாததால் அச்சமுற்ற க்ருஷ்ணா என்ற பயணி, பதறிப்போய் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “ட்ரெயின் நம்பர் 12650 கடத்தப்பட்டுவிட்டது. தயவு செய்து உதவி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டு IRCTC-ஐயும், செகந்திராபாத் கோட்ட ரயில்வே மேலாளரையும் (DRM) டேக் செய்து, #TrainHijacked என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டு ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.

க்ருஷ்ணாவின் இந்த ட்வீட் நொடிப்பொழுதில் வைரலானதோடு, ரயில்வேத்துறையின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. இதனையடுத்து, RPF தரப்பில் இருந்து “பயப்பட வேண்டாம். காசிப்பேட்டா, பால்ராஷா இடையே வேலை நடப்பதால் ஐதராபாத் வழியாக சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் திசை திருப்பப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து க்ருஷ்ணா தன்னுடைய ட்வீட்டை நீக்கியிருக்கிறார். இதனிடையே “உடனடியாக ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும், ரயில் திசை திருப்பப்பட்டதை அறிவிக்காமல் பயப்பட வேண்டாம் என அறிவுறுத்துவது எந்த வகையில் நியாயம்?” என இணையவாசிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

மேலும், வதந்தியை பரப்பி பயணிகள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்திய க்ருஷ்ணா மீது உற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் பதிவிட்டிருக்கிறார். இந்த நிலையில், க்ருஷ்ணா பதிவிட்ட #Trainhijacked ஹேஷ்டேக் நெட்டிசன்களிடையே மீம்ஸ்களாக உலா வருகிறது.