டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாஜக எத்தகைய தேர்தல் முடிவுகளை சந்திக்கிறது என்பதே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்துள்ள இடைக்கால பிணை எதிர்க் கட்சிகளுக்கு பயனுள்ளதா என்ற கேள்விக்கு விடை அளிக்கும் என்பது அரசியல் வல்லுநர்களின் நிலைப்பாடு. ஒருபுறம் தேர்தல் பரப்புரைக்காக உச்ச நீதிமன்றம் பிணை அளித்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலம் பாஜக, டெல்லி மற்றும் பஞ்சாபில் பின்னடைவுகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
அதேபோல I.N.D.I.A. கூட்டணி வட மாநிலங்களில் பலன் பெறும் சூழலும் உண்டாகலாம். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கூட்டணியிடம் ஒரு தொகுதியில் தோற்றால் கூட அது பின்னடைவுதான் என அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
மோடியின் கோட்டை என கருதப்படும் டெல்லியில் ஒரு பகுதியில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும் அது I.N.D.I.A. கூட்டணிக்கு கிடைக்கும் முக்கிய வெற்றியாக கருதப்படும் என்பது அவர்களுடைய நிலைப்பாடு.
பஞ்சாப் மாநிலத்தில் அரசியல் சூழல் வேறு மாதிரியாக இருந்தாலும், அங்கும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்திக்க வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது. தற்போதைய மக்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுசில்குமார் ரிங்கு சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பஞ்சாப் மாநிலத்தில் ஓரிரு தொகுதிகளில் வெற்றி கிடைத்தால் கூட அது ஆம் ஆத்மி கட்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்பது அந்தக் கட்சித் தலைவர்களின் கருத்து.
அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அனுதாபம் காரணமாக மக்களிடையே ஆதரவு கூடியது எனவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். அவர் சிறையில் இருந்து தற்போது வெளிவந்து பிரசாரத்தில் ஈடுபடும் சூழலில் அந்த அனுதாப அலையின் தாக்கம் குறையுமோ என்பது கட்சி தலைவர்களின் சந்தேகமாக உள்ளது. அனுதாப அலையை சாதகமாக்கிக் கொள்ள ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை மையப்படுத்தி பிரசாரம் செய்து வந்தது. தற்போது அந்த பிரச்சாரத்தை திசைமாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பது அவர்களின் கருத்து.
ஆகவே மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக கிடைத்துள்ள இடைக்கால பிணை, ஆம் ஆத்மி கட்சியை பொருத்தவரை சாதகமாக அமையும் வாய்ப்பும் உள்ளது. அப்படி அல்லாமல் பாதகமாக அமைவதற்கும் வாய்ப்புள்ளது என்பதை ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வெளிப்படையாக பேச தயங்குகின்றனர்.
டெல்லியில் மக்களவைத் தேர்தல் வாக்கெடுப்புக்கு முன் பிரசாரம் செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போதிய அவகாசம் உள்ளது. அதேபோல பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்பது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் கருத்தாக உள்ளது.