சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதர் பூனாவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வேகமாக பரவும் இந்த வைரஸால் இறப்பு ஏதும் இந்தியாவில் பதிவாகவில்லை என்றபோதும், அமெரிக்காவில் ஒருவர் ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஒமைக்ரானுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் வேலை செய்யும் என்பதற்கு எந்தவித அதிகாரப்பூர்வமான ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை.
''விரைவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி விடும். ஆனால் இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் நம்மால் கூறமுடியவில்லை. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டிருப்பதால் டெல்டா வைரஸை போன்று பாதி அளவு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட நிலைமை மிக மோசமாகிவிடும். அமெரிக்காவில் ஒரே வாரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 3 சதவீதத்தில் இருந்து 73 சதவீதமாக உயர்ந்துள்ளது'' என்று பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
இதன்காரணமாக பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்று தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகிறது, சீரம் நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அதர் பூனாவாலா உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டெல்டா வகை கொரோனாவை அழிக்க கொரோனா தடுப்பூசிகள் போதுமானது என்பதும், ஒமைக்ரானுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் மட்டுமே செயல்படும் என்பதையும் உணர்த்தும் விதமாக இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதன்மூலம் பூஸ்டர் டோஸூக்கு அடிபோடுகிறாரா ஆதர் பூனாவாலா? என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.