இந்தியா

ஏப்ரல் 30 வரை தனியார் ரயில் சேவைகள் ரத்து : ஐஆர்சிடிசி

ஏப்ரல் 30 வரை தனியார் ரயில் சேவைகள் ரத்து : ஐஆர்சிடிசி

webteam


கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 30ஆம் தேதி வரை தனியார் ரயில் சேவைகளை ஐஆர்சிடிசி நிறுவனம் ரத்து செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் என அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஊரடங்கிற்குப் பின்னர் அது தொடர்கிறது.

இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னரும் தொடரலாம் எனவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டால் ரயில்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துகள் மீண்டும் முடங்கும்.

இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தனியார் ரயில்களின் சேவை நிறுத்தப்படுவதாக, தனியார் ரயில்களை இயக்கும் ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் முன்பதிவு செய்திருந்தவர்களின் பணம் முழுவதும் திரும்பக்கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிருந்து லக்னோ மற்றும் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு தனியார் தேஜாஸ் ரயில்கள் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் சொந்த ஊர் திரும்ப ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து 30ஆம் வரை அனைத்து டிக்கெட்டுகளையும் மக்கள் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.