செய்தியாளர்: கணபதி சுப்ரமணியம்
ஈரான் - இஸ்ரேல் மோதலால் பாரசீக வளைகுடா பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும் எனவும் கருதப்படுகிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும்:
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆகவே உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பொதுவாக இறக்குமதி செய்யும் பிரண்ட் குரூட் விலை சமீபத்தில் ஒரு பீப்பாய்க்கு 90 டாலரை தொட்டுள்ளது. சிரியா நாட்டில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஈரான் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததை தொடர்ந்து பதட்டம் அதிகரித்ததோடு கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பு பிராண்ட் குரூட் விலை ஒரு பீப்பாய் 85 டாலர் என்ற சராசரி விலையில் இருந்து வந்தது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்:
இந்நிலையில், சென்ற மாதம் 14ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது. ஆனால், பதட்ட சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை படிப்படியாக அதிகரித்து வருவதால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என கருதப்படுகிறது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் தற்போது, எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகவே கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற எரிபொருள் நிறுவனங்களுக்கும் கூடுதல் சுமையை உண்டாக்கும் என கருதப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரை தொட வாய்ப்பு:
ஈரான் பாதுகாப்பு படைகள் இஸ்ரேல் நாட்டுக்கு தொடர்புடையது என கருதப்படும் கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளது மற்றும் ஈரான் நடத்தியுள்ள தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக பிரண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரை தொட வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்கள் மூலமாக நடத்தியுள்ள தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க முயற்சிக்கும் என கருதப்படுகிறது. இதனால் மோதல் மேலும் அதிகரிக்கும் எனவும், கச்சா எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பாரசீக வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் கருதப்படுகிறது.
மூன்றாவது உலகப்போர் மூளும் அபாயம்:
ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் மோதல் மேலும் வலுவடைந்துள்ளது. இதனால் பிற இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஹவுத்தி தீவிரவாதிகள் ஈரான் ராணுவத்துக்கு உதவ முன்வந்தால், மூன்றாவது உலகப்போர் மூளும் எனவும் அஞ்சப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தியது. ரஷ்ய நாட்டுக்கு சீனா மறைமுகமாக உதவி செய்து வருவதாகவும் அதேபோல் ஈரான் நாட்டுக்கும் சீனா மறைமுகமாக உதவி செய்யும் என கருதப்படுகிறது. அதே சமயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.