இந்தியா

2000 ரூபாய் நோட்டு வடிவில் அழைப்பிதழ்

webteam

கர்நாடகாவின் பாஜக எம்எல்ஏ சதீஷ் ரெட்டி, அவருடைய தொகுதியின் பேட்மிண்டன் கோர்ட் திறப்பு விழாவிற்கு 2000 ரூபாய் நோட்டு வடிவில் வித்யாசமான அழைப்பிதழை அச்சடித்துள்ளார்.

கர்நாடக பொம்மனஹள்ளி தொகுதியின் எம்எல்ஏ சதீஷ் ரெட்டி. இவர் தன்னுடைய தொகுதியில் 175வது வார்டில் பேட்மிண்டன் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஓபன் ஹால் திறப்பு விழாவிற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் அழைப்பிதழை அச்சடித்துள்ளார். அதில் 2000 ரூபாய் நோட்டு தாளைப் போலவே வெளிப்புற அமைப்பு கொடுக்கப்பட்டு அதில் காந்தி படத்திற்கு பதிலாக மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் தேதி, இடம் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் விவரமும் முன் பக்கத்தாளில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொம்மனஹள்ளி தொகுதியின் 175வது வார்டில் செய்யப்பட்டுள்ள வசதிகள் எண் வரிசையில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம், ஜன் தன் திட்டம், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு உள்ளிட்ட சாதனைகளை பட்டியலிட்டு காட்டியுள்ளனர். இறுதியாக அதில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என்று குறிப்பிட்டும், தொடர்புக்கான எண்ணும் கொடுக்கப்பட்டு அழைப்பிதழ் நிறைவடைகிறது. கிட்டத்தட்ட உண்மையான 2000 ரூபாய் நோட்டு போலவே இருக்கும் இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.