அரவிந்த் கெஜ்ரிவால், சவுரப் பரத்வாஜ் ட்விட்டர், ஏ.என்.ஐ.
இந்தியா

“சிறையில் கெஜ்ரிவாலை மெல்ல கொல்ல சதித் திட்டம்..” - ஆம் ஆத்மி கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

“திகார் சிறைக்குள்ளேயே வைத்து கெஜ்ரிவாலை மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

Prakash J

இந்தியாவின் ஜனநாயக தேர்தல் பெருவிழாவுக்கு மத்தியில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தன் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

அமலாக்கத் துறை, அரவிந்த் கெஜ்ரிவால்

அதேநேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ’தனது சர்க்கரை அளவைத் தொடர்ந்து சோதிக்கவும், குடும்ப மருத்துவரிடம் காணொலியில் உரையாடவும் அனுமதிகோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிக்க: “என் மனைவி உணவில் டாய்லெட் கிளீனர்” - குற்றஞ்சாட்டிய இம்ரான் கான்; பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்த மனுமீதான விசாரணையின்போது அமலாக்கத் துறை சார்பில், ”சர்க்கரை அதிகமாக இருப்பதால்தான் வீட்டுமுறை உணவு வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதாக மருத்துவக் காரணங்களை காட்டி ஜாமீன் பெற வசதியாக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகளை சாப்பிடுகிறார்” என வாதம் வைக்கப்பட்டது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு, “சிறையில் உள்ள கெஜ்ரிவால் நவராத்ரி பூஜை பிரசாதமான ஆலு பூரி ஒருமுறையும், மாம்பழம் மற்றும் சர்க்கரை இல்லாத இனிப்புகளை 3 முறை மட்டுமே சாப்ப்டுகிறார்.

Arvind Kejriwal

அதோடு சர்க்கரை இல்லாத தேநீரையே அவர் அருந்துகிறார். ஆனால் சர்க்கரை அளவை அதிகரித்து ஜாமீன்பெற முயற்சிப்பதாக அமலாக்கத்தித்துறை கூறுவது அபத்தமானது. அவர் தமது மருத்துவருடம் 15 நிமிடங்கள்கூட வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச முடியவில்லை” எனப் பதில் வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், “சிறையில் தாம் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத்துறை அரசியலாக்குகிறது” எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: மசூதியை நோக்கி அம்புவிடும் சைகை சர்ச்சை... வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளரை புறக்கணித்த மக்கள்! #Video

அதேநேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைவாசம் குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் அவ்வப்போது பரபரப்பான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தற்போது அதுபோன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. காணொலி காட்சி வழியே தன்னுடைய குடும்ப மருத்துவரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது, ’தனக்கு இன்சுலின் வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதற்கு சிறை நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்துவிட்டது.

இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவரான சவுரப் பரத்வாஜ், ”திகார் சிறைக்குள்ளேயே வைத்து மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழலுக்கு கெஜ்ரிவால் தள்ளப்பட்டு உள்ளார். அவர், மெதுவாக மரணம் அடைவதற்கான சதித்திட்டம் ஒன்று நடந்து வருகிறது என முழுப் பொறுப்புணர்வுடன் கூற விரும்புகிறேன். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் அனுமதி வழங்க மறுக்கப்படுகிறாது. கெஜ்ரிவால் சிறைக்கு வெளியே வருவதற்குள் அவரது பல உறுப்புகளுக்கு சேதம் விளைவிப்பதற்கான அனைத்து சதித்திட்டமும் சிறையில் நிகழ்கிறது” எனத் தெரிவித்திருப்பது அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்றதொரு குற்றச்சாட்டை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர், “சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக கடுமையான சதி உள்ளது. அவரை சிறையிலேயே கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!