இந்தியா

மஹாபாரத காலத்திலேயே இன்டர்நெட் வசதி: திரிபுரா முதல்வர் பேச்சு

Rasus

இன்டர்நெட் வசதி புதிதல்ல.. மஹாபாரத காலத்திலேயே இருந்த ஒன்றுதான் என திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து முதல்வராக பிப்லாப் குமார் தேப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அகர்தலாவில் கணினிமயமாக்கம் மற்றும் சீர்திருத்தம் குறித்து பேசிய பிப்லாப் குமார், இன்டர்நெட் வசதி புதிதல்ல. மஹாபாரத காலத்திலேயே இருந்த ஒன்றுதான் என தெரிவித்தார். குருஷேத்திரத்தில் 18 நாட்கள் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அதுகுறித்த ஒவ்வொரு அத்தியாயத்தையும் சஞ்சய், திரிதராஷ்ட்ரரிடம் விவரிப்பார். இது அப்போதே இன்டர்நெட் வசதி இருந்தை காட்டுகிறது. இன்டர்நெட் மட்டுமில்ல.. செயற்கைக்கோள் வசதியும் அப்போது இருந்திருக்கிறது என்றார்.

மேலும் பேசிய அவர், “ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. தற்போது தேசிய தகவல் மையத்தினர் பயன்படுத்திக் கொள்கின்றனரே தவிர வேறு ஒன்றுமில்லை. ஐரோப்பிய நாடுகள் கூட தாங்கள்தான் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததாக கூறுகின்றன, ஆனால் உண்மையில் தொழில்நுட்பம் நம்முடையது. நமது பொறியாளர்களில் பலரும் அமெரிக்கா உள்பட பலநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். கலாச்சாரத்தில் நம் நாடு எப்போதுமே செழிப்பாகத்தான் உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைவருக்கும் இணையதள சேவை வழங்கும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றியும் பெற்றுள்ளார்” என தெரிவித்தார்.