இந்தியா

வெளியான வேட்பாளர் பட்டியல்: காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தி

வெளியான வேட்பாளர் பட்டியல்: காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தி

Rasus

கர்நாடகாவில் வெளியாகியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தி நிலவுகிறது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12ம் தேதி வாக்குப்பதிவும், 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 218 பேர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 122 பேரில் 107 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு கட்சிக்குள்ளேயே அதிருப்தி நிலவுகிறது. ஹங்கல், கிட்டூர், கோலார், பேலூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஜகல்பூர் எம்எல்ஏ ராஜேஷ், தற்போதைய ஹங்கர் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான மனோகர் உள்பட பலர் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா சாமூண்டிஸ்வரி, பதாமி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களிடம் இருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது சித்தராமைய்யா சாமூண்டிஸ்வரி தொகுதியில் மட்டும் போட்டியிட உள்ளார். இதனிடையே பாஜகவை சேர்ந்த சதானந்தா கவுடா, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வேட்பாளர்களின் உறவினர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார்.