இந்தியா

வேறு மத இளைஞருடன் பேசியதால் பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்.. இதுதான் நடவடிக்கையா..?

வேறு மத இளைஞருடன் பேசியதால் பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்.. இதுதான் நடவடிக்கையா..?

webteam

வேறு மத இளைஞருடன் பேசியதால் இளம்பெண் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்கள் 10 நாட்களுக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்து மதத்தை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முஸ்லிம் நண்பர் ஒருவருடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றதாக தெரிகிறது. அதனைக் கண்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த சிலர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இதுதொடர்பாக போலீசாருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். போலீசார் இருவரையும் தனித்தனியாக போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சுதாவிடம், நீ ஒரு இந்துவாக இருந்துக்கொண்டு எப்படி முஸ்லிம் இளைஞரோடு பழகுகிறாய்..? என காவலர்கள் சர்ச்சைக்குரிய முறையில் அத்துமீறி கேள்வி கேட்கின்றனர். அந்தப் பெண் அதற்கு பதிலளிக்க முயற்சிகையில் அவர் அருகில் இருக்கும் பெண் போலீசார் ஒருவர் அவரை பேசவிடாதபடி தொடர்ச்சியாக அடிக்கிறார். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. மேலும் அந்த இளைஞரை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும் கூறப்பட்டது. வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் சம்பந்தப்பட்ட 3 காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் ஆவதற்குள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 காவலர்களும் கோரக்பூரருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யாமல் பணியிட மாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இளைஞரை தாக்கிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்களும் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர் என்ற புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மீரட் மூத்த போலீஸ் அதிகாரி அகிலேஷ் கூறும்போது, “ இவர்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை பிரிவின்படி உடனடியாக கைது செய்ய வேண்டும் என தேவையில்லை. துறை ரீதியான விசாரணைக்கு காத்திருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது. அதனை வைத்தே குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடருவதா வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.