இந்தியா

சுவாரஸ்யம் நிறைந்த திருப்பதி லட்டின் வரலாறு!

webteam

திருப்பதி ஏழுமலையான் கோவியிலில் வழங்கப்படும் லட்டின் வயது 304 என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதிக்கே லட்டா என்ற சொலவடை உருவாகும் அளவிற்கு திருப்பதி லட்டின் பிரபலம் என்பது யாவரும் அறிந்தது. அந்த லட்டின் சுவையை போலவே அதன் பின்னணியும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கிறது. திருப்பதி கோயிலில் லட்டு வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. 

1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. 1803 ஆம் ஆண்டு இருந்து பிரசாதங்களை வர்த்தக ரீதியாக பக்தர்களுக்கு விற்கும் முறை கோயிலில் தொடங்கியது. 304 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 2 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படுகின்றன. உற்சவ நாட்களில் 5 லட்சம் லட்டுகள் வரை சேமிப்பில் வைக்கப்படுகின்றன. 

2009 ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. லட்டு பிரசாத விற்பனையில் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மாதம் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.