இந்தியா

நாடு முழுவதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: உளவுத்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: உளவுத்துறை எச்சரிக்கை

Rasus

நாடு முழுவதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில், போபால்-உஜ்ஜைனி பயணிகள் ரயிலில் குண்டு வெடித்தது. இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து மத்திய உளவுத்துறை, மத்திய பிரதேச மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு படைகள் நடத்திய அதிரடியில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளார்கள் சிக்கினர்.

ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி என சந்தேகிக்கப்படுகிற முகமது சைபுல் என்பவர், லக்னோவிலுள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் ஹாஜி காலனியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத தடுப்பு படை போலீஸ் கமாண்டோக்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டைச்சுற்றி வளைத்து, பயங்கரவாத தடுப்புப் படை தாக்குதல் நடத்தியது. இதில் முகமது சைபுல் கொல்லப்பட்டான். அவன் தங்கியிருந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகள், ஐஎஸ் பயங்கரவாதிகளின் கொடி கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு போபால் சென்று உள்ளது.

இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலானது வெறும் ஒத்திகை என்றும் நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரையில் 9-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு மாதத்தில் பல்வேறு இடங்களில் கொடூரத் தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்து உள்ளனர் என தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.