இந்தியா

'ராக்கி பாய் எஃபெக்ட்' - ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

'ராக்கி பாய் எஃபெக்ட்' - ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

ஜா. ஜாக்சன் சிங்

கேஜிஎஃப் 2 ராக்கி பாய் கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பின் காரணமாக ஒரு பாக்கெட் சிகரெட்டை ஒரே நேரத்தில் புகைத்து தள்ளிய சிறுவன் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை, அவனது பெற்றோரும் உறவினர்களும் இன்று அதிகாலை அங்குள்ள செஞ்சுரி மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். ஆபத்தான நிலையில் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அளித்த முதல்கட்ட சிகிச்சையில் சிறுவனின் உடல்நிலை ஓரளவு தேறியது. பின்னர், என்ன காரணத்தால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்று சிறுவனிடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர். முதலில் பதில் கூற தயங்கிய சிறுவன், பின்னர் தனது பெற்றோரிடம் சொல்லிவிட வேண்டாம் எனக் கூறி மருத்துவர்களிடம் என்ன நடந்தது என்பதை கூறியிருக்கிறான்.

அதாவது, கேஜிஎஃப் 2 திரைப்படத்தை கடந்த வாரம்தான் அந்த சிறுவன் பார்த்திருக்கிறான். அப்போது, அந்தப் படத்தில் கதாநாயகனாக வரும் ராக்கி பாய் மீது அவனுக்கு பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ராக்கி பாய் போல கெத்தாக இருக்க வேண்டும் என தனக்கு தானே உறுதியெடுத்துக் கொண்ட சிறுவன், அந்த கதாபாத்திரத்தை அப்படியே தனது நிஜ வாழ்க்கையிலும் காப்பியடிக்க முயற்சித்துள்ளான். அந்தப் படத்தில் ராக்கி பாயாக நடித்த யஷ், தொடர்ச்சியாக சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவராக காட்டப்பட்டிருப்பார்.

எனவே, தானும் சிகரெட் பிடித்தால்தான் ராக்கி பாயை போல கெத்தாக இருக்க முடியும் என நினைத்த சிறுவன், நேற்று இரவு ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்துள்ளான். முதன்முறையாக இத்தனை சிகரெட்டுகளை பிடித்ததால் அவனது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

இதனால் நடு இரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உயிருக்கு அபத்தான நிலையில் அவனை அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். தற்போது அந்த சிறுவன் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திரைப்படங்களை பொழுதுபோக்காக பார்க்காமல் அதனை உண்மை என நம்பும் இளம் தலைமுறையினர் அதிகரித்து வருவதாகவும், அதனால் சமூகத்தில் பல பிரச்னைகள் ஏற்படுவதாகவும் மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.