எம்.டி.ஹெச் உரிமையாளர், இந்தியாவின் 'மசாலா கிங்' என்று அழைக்கப்படும் மகாஷே தாரம்பால் குலாட்டி இன்று காலை காலமானார். அவருக்கு 98 வயது. இவரது மறைவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொழில்முனைவோர்களுக்கு உத்வேகமூட்டும் இவரது வாழ்க்கை வரலாறு இதோ..
யார் இந்த 'மசாலா கிங்' தாரம்பால் குலாட்டி?!
ராஜ்நாத் சிங், மனிஷ் சிசோடியா என எல்லோரும் குலாட்டியை, ''இந்தியாவின் மிகவும் ஊக்கமளிக்கும் தொழில்முனைவோர்" என அழைக்கின்றனர். அவர்கள் குறிப்பிட்டதுபோல இந்தியாவில் இருக்கும் பல தொழிலதிபர்களுக்கும், தொழில்முனைவோர் ஆக முயற்சிப்பவர்களுக்கும் குலாட்டி மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இவரை முன்மாதிரியாக கொண்டு தொழில்துறையில் சாதித்தவர்கள் ஏராளம்.
1923-ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத இந்தியாவின் சியால்கோட்டில் (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது) மகாஷே மற்றும் மாதா சனன் தேவி ஆகியோருக்குப் பிறந்தவர் குலாட்டி. ஆற்றங்கரைகளுக்கு அருகில் எருமைகளுடன் நேரத்தை செலவிடுவது, அகராஸில் குஸ்தி விளையாடுவது, தந்தைக்குப் பால் பொருள்கள் விற்க உதவுவது மற்றும் பள்ளிக்குச் செல்வதுதான் குலாட்டியின் ஆரம்ப நாட்களை ஆக்கிரமித்தன.
ஆரம்பத்தில் இருந்தே படிப்பில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஐந்தாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறி, கண்ணாடி, சோப்புகள் விற்கும் சிறு வியாபாரத்தில் தனது தந்தையுடன் சேர்ந்தார் குலாட்டி. இதன்பின் மெது மெதுவாக துணி மற்றும் அரிசி வர்த்தகத்தை தொடங்கினார். இப்படி ஒரு இளைஞனாக அவர் பெற்ற அனுபவம் எதிர்காலத்தில் தனது நுகர்வோர் மையப்படுத்தப்பட்ட பார்வையை வடிவமைத்தது.
ஒரு குறுகிய காலத்தில், தந்தை-மகன் ஜோடி 'மகாஷியன் டி ஹட்டி (MDH)' என்ற பெயரில் ஒரு மசாலா கடையைத் திறந்தனர். அந்தக் காலகட்டத்தில், 'டெகி மிர்ச் வேல்' என்று பிரபலமாக அறியப்பட்டது அந்த மசாலா. நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவர்கள் வியாபாரத்தில் பிரிவினை மூலம் சிக்கல் வந்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது தங்கள் உடமைகளை எல்லாம் விட்டுவிட்டு ஒரே இரவில் டெல்லிக்கு குடிபெயர வேண்டியிருந்தது. அப்போது குலாட்டிக்கு வயது 23. கையில் இருந்தது ரூ.1500 மட்டுமே. இதில் 650 ரூபாய் கொடுத்து ஒரு குதிரை வண்டியை வாங்கிய குலாட்டி, புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து மக்களை அழைத்துச் செல்லும் வேலையை செய்துவந்தார். சுமார் இரண்டு வருடங்கள் இந்தப் பணியில் இருந்தாலும் வரும் வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியாகவே இருந்தது.
அப்போது மீண்டும் தங்களது 'மசாலா' தொழிலை ஆரம்பித்தார். மசாலா வர்த்தக வியாபாரத்தில் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையும், அந்தத் தொழிலில் அவர் கற்று தேர்ந்த நிபுணத்துவமுமே மீண்டும் அந்தத் தொழிலுக்குச் செல்லக் காரணமாக அமைந்தது. தனது குதிரை வண்டியை விற்று சியால்கோட்டின் 'மகாஷியன் டி ஹட்டி'யின் பதாகையை மீண்டும் நிறுவினார். சில காலங்களில் டெல்லி எங்கும் இவர்களின் 'மசாலா' புகழ் பரவியது. 1953-ஆம் ஆண்டில் டெல்லியில் முதல் நவீன மசாலா கடையையும் தங்கள் குடும்பத்தின் உதவியுடன் நிறுவினார் குலாட்டி. இதன்பின் ஏறுமுகம்தான்.
மக்களின் ருசியை அறிந்து மசாலாக்களை தயாரிக்கத் தொடங்கியது இவரின் நிறுவனம். இதனால் வட மாநிலங்களில் அதிக கிளைகள் திறக்கப்பட்டன. டெல்லி கடந்த பல மாநிலங்களிலும் தடம் பதித்தார் குலாட்டி. மேலும் இந்தியாவை தாண்டியும் பிசினெஸ் நடந்தது. நிறுவனம் கோடிகளில் புரண்டது.
மீட் மசாலா, கசூரி மெதி, கரம் மசாலா, ராஜ்மா மசாலா, ஷாஹி பன்னீர் மசாலா, தால் மக்கானி மசாலா, சப்ஸி மசாலா உள்ளிட்ட 64 தயாரிப்புகளுடன், இந்த நிறுவனம் 2017-ஆம் ஆண்டில் ரூ.924 கோடி வருவாயைப் பெற்றது. இதுவே இவரின் சாதனைக்கு ஒற்றை அடையாளம்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது இவரின் மசாலாக்கள். மேலும் எட்டு லட்சம் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் 1,000 மொத்த விற்பனையாளர்கள் என மசாலா தொழிலின் ஒற்றை சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய குலாட்டி இன்று அதிகாலை தனது இறுதி மூச்சை விட்டுள்ளார். வயது முதர்வினால் ஏற்படும் உடல்நலைக்குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும், அவரின் சாதனைகள் நிச்சயம் பலருக்கு இன்ஸ்பிரேஷன்தான்.
RIP குலாட்டி!