இந்தியா

41 ஆண்டுகள் பங்களிப்பு... கடற்படையிலிருந்து விடுவிக்கப்படும் ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல்

41 ஆண்டுகள் பங்களிப்பு... கடற்படையிலிருந்து விடுவிக்கப்படும் ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல்

நிவேதா ஜெகராஜா

இந்திய கடற்படையில் 41 ஆண்டுகள் பங்காற்றிய ஐஎன்எஸ் ராஜ்புத் என்ற போர்க்கப்பல் கடற்படையிலிருந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கஷின் ரகத்தைச் சேர்ந்த இந்த போர்க்கப்பல், இந்திய கடற்படையில் கடந்த 1980-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி சேர்க்கப்பட்டது. இதை அப்போதைய ரஷ்யாவுக்கான இந்திய தூதர் ஐ.கே. குஜ்ரால் கடற்படையில் இணைத்து வைத்தார்.

கடற்படையின் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் இந்த போர்க்கப்பல் திறம்பட பங்காற்றியுள்ளது. இந்திய அமைதிப்படை, இலங்கை கடல் பகுதியில் ரோந்து பணிகளில் இந்த கப்பல் ஈடுபட்டுள்ளது. கடந்த 41 ஆண்டுகளில், 31 தலைமை அதிகாரியின் கீழ் இந்த கப்பல் செயல்பட்டுள்ளது.

41 ஆண்டுகள் பங்காற்றிய இந்த போர்க்கப்பல், கடற்படையில் இருந்து நாளை விடுவிக்கப்படுகிறது. இதற்கான விழா விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நாளை நடைபெறுகிறது.

கொரோனா தொற்று சூழல் காரணமாக, இந்த விழா மிக எளிய முறையில் நடத்தப்படும். இதில் உள்ள கடற்படை கொடி, நாளை சூரியன் மறையும்போது இறக்கப்படும். அத்துடன் இந்த போர்க்கப்பல் கடற்படை பணியில் இருந்து விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.