நாராயண மூர்த்தி x page
இந்தியா

“வாரம் 6 நாள் வேலையை சாகும்வரை தொடர்வேன்” - மீண்டும் வலியுறுத்திய இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி!

“வாரத்தில் 6 நாள் வேலை என்பதை என் வாழ்நாள் வரை தொடர்வேன்” என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

Prakash J

டெல்லியில் சி.என்.பி.சி - டிவி18 குளோபல் லீடர்ஷிப் உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி,

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு அவசியம் தேவை. அதற்கு வாரத்துக்கு 6 நாள் வேலை முக்கியம் என்ற நிலைப்பாட்டில், நான் உறுதியாக இருக்கிறேன். வாரம் 6 நாள் வேலை நாட்களாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். இதை என் இறுதிமூச்சு இருக்கும்வரை கடைபிடிப்பேன். ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. என் பணி அனுபவத்தில் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தேன். 1986இல் வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை என்ற மாற்றம் எனக்கு ஏமாற்றத்தை தந்தது. அந்த மாற்றத்தை நான் இன்றுவரை ஏற்கவில்லை.

தேசத்தின் முன்னேற்றத்துக்கு கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், நாம் பணி சார்ந்த உற்பத்தித் திறனை மேம்படுத்தாத வரையில், ஊழலைக் குறைக்காத வரையில், அதிகார வர்க்கத்தில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்காத வரையில் வளர்ந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட இயலாது. என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இதை நான் சொல்லக் காரணம் இந்தியா எனது நாடு.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாட்டில் இதுதான் நடந்தது. குறிப்பிட்ட ஆண்டு காலம் அனைத்து ஜெர்மனி மக்களும் கூடுதல் நேரம் வேலை செய்வதை உறுதி செய்தது. மிகவும் கடினமாக உழைக்கும் வகையில் நாம் மாற வேண்டும். அது நடந்தால்தான் பொருளாதார ரீதியாக உலக அளவில் நம் நாடு வளர்ச்சியை காண முடியும்” என பேசினார்.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆளும்கட்சி.. ராஜபக்சே கட்சியுடன் ஒப்பீடு!

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில், “தற்போதுள்ள இளம் இந்தியர்கள் தங்கள் வேலை நேரத்தை வாரத்திற்கு குறைந்தது 70 ஆக நீட்டிக்க வேண்டும்” எனப் பரிந்துரைத்தார். இதற்காக நாடு முழுவதும் அவர் பரவலாக விமர்சிக்கப்பட்டார். தற்போதும் அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதே உச்சி மாநாட்டில், அவர் பாடிய பாடல் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை, அவரது மனைவியும், ராஜ்யசபா எம்.பி-யுமான சுதா மூர்த்திக்காகப் பாடியுள்ளார். அவர் தனது போனில், பிரபல அமெரிக்க பாடகர் பிரெஸ்லியின் கிளாசிக் பாடலான, Can’t Help Falling in Love (காதலில் விழ உதவ முடியாது) என்ற வரிகளைப் பார்த்து பாடினார். இதைப் பார்த்த பயனர்கள் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர் "அவருக்கு உண்மையில் இசை தெரிந்துள்ளது" என்றும், மற்றொரு பயனர், "இவர் காதல் மூர்த்தி" என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “மதச்சார்பின்மை என்ற சொல் கூடாது” - அரசியலமைப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி சர்ச்சையில் வங்கதேசம்!