infosys twitter
இந்தியா

’வீட்டில் வேலை பார்த்தது போதும்.. இனி ஆபீஸ் வாங்க’ - ஊழியர்களுக்கு புதிய உத்தரவிட்ட இன்ஃபோசிஸ்!

இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களை, மாதத்துக்கு 10 நாட்கள் அலுவலகம் வந்து வேலை பார்க்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

Prakash J

பாட்காஸ்ட் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, “இந்தியாவின் உற்பத்தி திறன் மிகக்குறைவாக உள்ளது. இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். உற்பத்தி திறனை மேம்படுத்தாத வரை, ஊழல்களை குறைக்காத வரை வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது. எனவே அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

நாராயண மூர்த்தியின் இந்த கருத்துக்கு, பல நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவித்தாலும், ஊழியர்கள் தரப்பில் இருந்து மனஅழுத்தம், இதய பிரச்னைகள், உடல்நலக் கோளாறு, குடும்பச் சூழல் ஆகிய பாதிப்புகள் வரும் என மருத்துவர்களும் தொழிலாளர் நல அமைப்பினரும் இதை முற்றிலும் எதிர்த்தனர். மேலும், இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியாவின் நம்பர் 2 மென்பொருள் -சேவை ஏற்றுமதி நிறுவனமான நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் லிமிடெட், அதன் ஊழியர்களில் சிலரை மாதத்தில் 10 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

கோவிட் 19

2019ஆம் ஆண்டு இறுதி முதல் கொரோனா எனும் தொற்று, உலகம் முழுவதும் கோரத் தாண்டவம் ஆடியது. இதனால் உலகில் லட்சக்கணக்கானோர் பலியாகினர். மேலும் பொருளாதாரப் பிரச்னையாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உலகமெங்கும் பொது முடக்கம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தடுப்பூசி வருகைக்குப் பிறகு, கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகள் மெல்லமெல்ல விலக்கிக் கொள்ளப்பட்டன. பொது முடக்கத்தின்போது பல நிறுவனங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்து வந்தனர். அது, இன்றும் ஒருசில நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: அவ்ளோ வெகுளியா நீங்க! பேட்டரிடமே ரிவ்யூ கேட்ட முகமது ரிஸ்வான்.. கலாய்க்கும் ரசிகர்கள்! வைரல் வீடியோ!

இந்த நிலையில், ’இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்’ எனச் சமீபத்தில் கருத்து தெரிவித்த நாராயண மூர்த்தியின் நிறுவனமான இன்ஃபோசிஸ் தங்களது ஊழியர்களில் சிலரை மாதத்துக்கு 10 நாட்கள் அலுவலகத்து வந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து வந்துள்ளது. இந்தச் செய்தி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த இன்ஃபோசிஸ், நவம்பர் 20 முதல் அமலுக்கு வரும் மாற்றம் குறித்து சில நுழைவு மற்றும் நடுத்தர ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அனைத்து ஊழியர்களையும் பாதிக்காது எனவும் அது தெரிவித்துள்ளது.

infosys

இதுகுறித்த அந்த மின்னஞ்சலில், ’எங்கள் ஊழியர்களுடன் நாங்கள் நெகிழ்வாக இருக்க விரும்புகிறோம். ஒவ்வொரு காலாண்டிலும், ஒவ்வொரு வாரமும் அதிகமான பணியாளர்களை மீண்டும் வளாகத்திற்குள் பார்க்க விரும்புகிறோம். இது தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு வரவைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை இன்ஃபோசிஸ் எடுத்துள்ளது. முன்னதாக, டிசிஎஸ் நிறுவனத்துடன் விப்ரோ நிறுவனமும் அலுவலகத்திலிருந்து வேலை செய்யும்படி ஊழியர்களை வலியுறுத்தியிருந்தது. தற்போது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள், எந்த செலவும் இல்லாமல் வேலை செய்கிறார்கள். இனி அவர்கள் வலுவலகத்துக்கு வரவேண்டுமானால் செலவுகள் அதிகமாக இருக்கும். இந்தச் சூழலில் இன்ஃபோசிஸின் அறிவிப்பு அவர்களுக்கு அழுத்தத்தைத் தந்துள்ளது.

இதையும் படிக்க: தென்னாப்ரிக்க வரலாற்றில் முதல் வீரர்.. புதிய சாதனை படைத்த டி காக்.. அடுத்த டார்கெட் ரோகித், சச்சின்!