ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது நல்ல செய்தி என்று இந்திராணி முகர்ஜி கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்கள் இருந்தன.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையிலேயே கார்த்தி சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு அடிப்படையே அன்று இந்திராணி அளித்த வாக்குமூலம்தான் என கூறப்படுகிறது. ஆனால், இந்திராணி முகர்ஜி தனக்கு யார் என்றே தெரியாது என்றும் வாழ்நாளில் அவரை பார்த்ததில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் கூறிவருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய மகள் ஷீனா போரா கொலை வழக்கில் விசாரணைக்காக டெல்லியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இந்திராணி முகர்ஜி, ‘ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது நல்ல செய்தி’ என கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.