இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாக எமர்ஜென்சி நிலை பதிந்திருக்கிறது. பல விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்த அந்த எமர்ஜென்சி நிலை 1975 ஆம் ஆண்டு இதே நாளில் தான் பிரகடனம் செய்யப்பட்டது. அந்த நாட்களை திரும்பிப்பார்க்கலாம்.
இந்திரா காந்தி என்கிற இரும்புப் பெண்மணி சர்வ வல்லமை கொண்ட தலைவராக இந்தியாவின் அசைக்க முடியாத பலமாக கருதப்பட்ட காலம். 1966 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்ற நாள் தொடங்கி இந்திரா காந்தி அதிகார மையமாகவே இருந்தார். 1969 ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிளவுபட்டபோதும், இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அதிக பலம் மிக்கதாக இருந்தது. 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இத்தேர்தலில் அவர் முறைகேடுகளை செய்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ் நரேன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குபின் வந்த தீர்ப்பில் இந்திரா காந்தி வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, இந்திரா காந்தியை பதவியில் இருந்து விலகுமாறு கோரி பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன. ஜெயப்பிரகாஷ் நாராயண் , மொரார்ஜி தேசாய், ஜிவத் ராம் கிருபாளனி, அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில்தான், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி, அரசுப் பணியாளர்களின் போராட்டத்தால் ஜனநாயகத்திற்கு குந்தகம் ஏற்படும் என்றும் கூறி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யுமாறு அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமதுவுக்கு, இந்திரா காந்தி கடிதம் எழுதினார். இதையேற்று ஜூன் 25 ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனமானது.
இதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தப்பவில்லை. 1975 ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி, 1977 மார்ச் 21 வரை நீடித்த எமர்ஜென்சி காலத்தில் நாடு முழுவதும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எதிர் கருத்துகளை கொண்ட ஆர்எஸ்எஸ் போன்ற அரசியல் சாரா அமைப்புகளும் தடை செய்யப்பட்டன. குஜராத், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. கருத்தடைச்சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. ஊடகங்களுக்கு கடுமையான தணிக்கை என இந்திய ஜனநாயகம் கடுமையான சோதனைகளுக்கு உள்ளானது.
1977 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி புதிய தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார் இந்திரா காந்தி. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். நெருக்கடி நிலை 1977 மார்ச் 21 ஆம் தேதி அதிகாரபூர்வமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. 1999 ல் நூற்றாண்டின் சிறந்த பெண்மணி என்று பிபிசியும், 2001ல் நாட்டின் சிறந்த பிரதமர் என்று இந்தியா டூடேவின் கருத்துக்கணிப்புகளும் பாராட்டிய இரும்புப் பெண்மணியின் அதிகாரத்தில் நெருக்கடி நிலை என்ற கருப்புப் புள்ளி மிக ஆழமாக பதிந்திருக்கிறது.