இந்தூர் மாணவர் ட்விட்டர்
இந்தியா

இந்தூர்: கோச்சிங் கிளாஸில் மாரடைப்பால் மேஜையில் விழுந்த மாணவர்! சிலநாட்களில் 4 மரணங்கள்-வைரல் வீடியோ

இந்தூரில் போட்டித் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

சமீபகாலமாக நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகியுள்ளன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள்கூட மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக, மாரடைப்பு காரணமாக 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்கூட, உத்தரப்பிரதேசம் நொய்டாவில் இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருந்தார்.

மாரடைப்பு

இந்த நிலையில், இந்தூரில் போட்டித் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: 6 குடியிருப்புகள் 125 முறை பத்திரப்பதிவு: வங்கிகளை ஏமாற்றிய உரிமையாளர்.. கோடிக்கணக்கில் வீட்டுக்கடன்

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா லோதி (20). இவர், மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) நடத்தும் தேர்வுக்குத் தயாராகும் வண்ணம் இந்தூரில் உள்ள கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது அதை உற்றுக் கவனித்தபடி இருந்த ராஜா லோதி, அடுத்த சில நிமிடங்களில் தன் நெஞ்சைப் பிடித்தபடி மேஜையில் விழுகிறார். ஆனால் அருகிலிருந்தவர்கள் அவர் தூங்கி விழுவதாக நினைக்கின்றனர்.

பின்னர் அவர் நெஞ்சு வலியால் துடிப்பதைக் கண்டு அவர்களுக்கு நண்பர்கள் உதவுகின்றனர். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் வரும் வழியிலேயே மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்த கோச்சிங் சென்டரில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. அவரது உடல் கூறாய்வில், அவர் மாரடைப்பால் பலியாகியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாகவும், முழுமையான அறிக்கை வந்தால்தான் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்தூரில் மட்டும் கடந்த சில நாட்களில் இதுபோன்று 4 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் 55 வயதான பெரியவர் ஒருவரும், 16 வயது சிறுமி ஒருவரும் அடக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: 2024: 14 நாட்களில் 7,500 பேர்: ’இனியும் பணிநீக்கம் தொடரும்’ மறைமுகமாக எச்சரித்த சுந்தர் பிச்சை