இந்தியா

ஆன்லைனில் ஆங்கிலம் கற்று இந்தோனேசிய இங்கிலீஷ் டீச்சரை மணந்த உ.பி. நபர் - பாலமாக இருந்த FB!

ஆன்லைனில் ஆங்கிலம் கற்று இந்தோனேசிய இங்கிலீஷ் டீச்சரை மணந்த உ.பி. நபர் - பாலமாக இருந்த FB!

JananiGovindhan

ஆன்லைன் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொண்டிருந்த போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவருக்கும் இந்தோனேசியவைச் சேர்ந்த இங்கிலீஷ் ஆசிரியைக்கும் ஏற்பட்ட நட்புறவு காதலாகி திருமணத்தில் முடிந்திருக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்திருக்கிறது.

காதலிப்பதற்கு ஜாதி, மதம், இனம், மொழி என எந்த பேதமும் கிடையாது என்பது உலகின் ஒவ்வொரு முறை நடக்கும் சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் மூலம் மீண்டும் நிரூபனமாகி வருகிறது. அந்த வகையிலான காதல் திருமணம் குறித்துதான் பார்க்கப்போகிறோம்.

அதன்படி, உத்தர பிரதேசத்தின் தியோரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சன்வர் அலி. கடந்த 2015ம் ஆண்டு ஆன்லைன் மூலம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது இந்தோனேசியாவைச் சேர்ந்த மிஃப்தாவுல் ஜன்னா என்ற பெண் ஃபேஸ்புக்கில் சன்வர் அலிக்கு friend request கொடுத்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் நட்பாக பழகி வந்திருக்கிறார்கள்.

இந்தோனேசியாவில் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வரும் மிஃப்தாவுல் ஜன்னா பட்டப்படிப்பு முடித்துவிட்டு அங்கு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவின் தென் பகுதியில் புயல் வந்ததை அறிந்த மிஃப்தாவுல் சன்வர் அலியும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என கேட்டு அறிந்திருக்கிறார்.

அது முதல் இருவருக்கும் இடையேயான பிணைப்பு அதிகமாகவே காதல் உணர்வும் எட்டிப் பார்த்திருக்கிறது. இப்படி இருக்கையில்தான் முதலில் சன்வர் அலி தன்னுடைய காதலை மிஃப்தாவுலிடம் தெரிவிக்க அந்த பெண்ணும் நேரம் எடுத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஆறு மாதம் கழித்து சன்வர் அலியின் காதலுக்கு பச்சை சிக்னல் காட்டியிருக்கிறார் மிஃப்தாவுல். இதனையடுத்து 2018ம் ஆண்டு சன்வர் இந்தோனேசியாவுக்கு சென்று மிஃப்தாவுலையும் அவரது குடும்பத்தினரையும் முதல் முதலில் நேரில் சந்தித்திருக்கிறார்.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பு குடும்பத்திலும் எந்த எதிப்பும் எழாததால் திருமணத்துக்கும் தலையாட்டியிருக்கிறார்கள். இதனையடுத்து 2019ம் ஆண்டு மீண்டும் சன்வர் இந்தோனேசியா சென்ற போது இருவருக்கும் நிச்சயம் ஆகவே திருமணத்துக்கான திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா பரவல் தொடங்கியதால் அது முதல் திருமண வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் 29ம் தேதி மிஃப்தாவுலும் சன்வரும் திருமணம் செய்துக்கொண்டிருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் உத்தர பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது.