இண்டிகோ ட்விட்டர்
இந்தியா

கடைசிவரை வேலை செய்யாத ஏசி.. வியர்வையில் குளித்த பயணிகள்! இண்டிகோ விமானம் மீது குவிந்த புகார்

இண்டிகோ விமானத்தில் ஏசி இயக்கப்படாததால் பயணிகள் அதிருப்தி அடைந்ததுடன், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

Prakash J

சண்டிகரில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று (ஆகஸ்ட் 5) இண்டிகோ 6E7261 என்ற எண் கொண்ட விமானம் இயக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதில் ஏசி திடீரென வேலை செய்யாமல் போயுள்ளது. இதனால் அதிலிருந்த பயணிகள் அனைவருக்கும் வியர்வையில் நனையத் தொடங்கியுள்ளனர்.

மேலும், அந்த ஒட்டுமொத்த 90 நிமிடங்களுக்கும் மிக மோசமானதாக பயணத்தை அனுபவித்துள்ளனர். இந்த விமானத்தில் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் பயணம் செய்துள்ளார். அவரும் இந்த வேதனையான பயணத்தை மேற்கொண்டதாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "விமான நிலையத்திலேயே முதலில் சுமார் 10-15 நிமிடங்கள் ஏசி இல்லாமல்தான் இருந்தோம். அதன்பின்னரும் ஏசி இல்லாமலேயே விமானம் புறப்பட்டுச் சென்றது. டேக்-ஆஃப் முதல் தரையிறங்கும் வரை, ஏசிகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பயணிகள் பலரும் இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கே இருந்த ஏர் ஹோஸ்டஸ் பயணிகளுக்கு டிஷ்யூ பேப்பர்களை மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்த வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள அவர், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றை டேக் செய்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் டிஷ்யூ பேப்பரை வைத்து விசிறியபடியும், வியர்வையைத் துடைத்தப்படியும் இருப்பதைக் காணமுடிகிறது.

கடந்த சில நாட்களாகவே இண்டிகோ விமான நிறுவனமும் அதன் ஊழியர்களும் தொடர்ந்து புகார்களைச் சந்தித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 4ஆம் தேதி, டெல்லிக்குக் கிளம்பிய விமானம் பாட்னாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் பாட்னாவில் தரையிறக்கப்பட்டது. அதேபோல ராஞ்சிக்குப் புறப்பட்ட விமானமும் தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. இண்டிகோ விமான நிறுவனம், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.