பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான சிறப்புகளையும் அம்சங்களையும் பெற்றுள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதன்படி கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் இருக்கும் கோவில் ஒன்றை முதலை ஒன்று ஆண்டாண்டு காலமாக பாதுகாத்து வந்தது.
பொதுவாக கோவில்களில் யானைகளே பாதுகாப்புக்காக வைத்திருப்பது வழக்கமாக இருக்கும். ஆனால் காசர்கோட்டில் உள்ள கும்பாலா என்ற இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அனந்தபுரா பத்மநாப சுவாமி கோயில் ஏரியின் நடுவில் உள்ளது. இதனை முதலைதான் பாதுகாத்து வருகிறது.
ஒரு முதலை இறந்துவிட்டால் மற்றொரு முதலை தானாக வந்து அதன் வேலைகளை பார்க்குமாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கோவிலை பாதுகாத்து வரும் முதலை ஒரு போதும் அசைவ உணவுகளை உண்டதில்லையாம். ஏரியில் இருக்கும் மீன்களை கூட தொந்தரவு செய்ததில்லையாம்.
ஒவ்வொரு நாளும் உச்சிகால பூஜை முடிந்த பிறகு கோவில் பிரசாதத்தையே முதலைக்கு கொடுப்பார்களாம். இப்படியாக பபியா என்ற முதலை ஒன்று பல ஆண்டுகளாக அனந்தபுரா கோவிலை பாதுகாத்து வந்த நிலையில் தற்போது அந்த முதலை தனது 75வது வயதில் உயிரிழந்திருக்கிறது.
நேற்று (அக்.,09) இரவு 10.30 மணியளவில் பபியா முதலை இறந்துவிட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். கோவில் ஏரியில் குளிக்கவோ அல்லது கோவிலுக்கு வரும் பக்தர்களையோ ஒரு நாளும் அச்சுறுத்ததாமல் இருந்ததால் பபியா முதலையின் இழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படி இருக்கையில், உயிரிழந்த முதலைக்கு முறையான இறுதிச் சடங்குகளை கோவில் நிர்வாகம் நடத்தியிருக்கிறது. அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக இந்தியாவின் முதல் சைவ முதலை என்ற பெயரையும் பபியா பெற்றிருக்கிறது.