இந்தியா

116 கோடி செல்போன்கள்.. கேம் விளையாடுவதில் தீவிரம்: இந்தியர்களின் நிலை என்ன?

116 கோடி செல்போன்கள்.. கேம் விளையாடுவதில் தீவிரம்: இந்தியர்களின் நிலை என்ன?

webteam

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருவது ஒருபுறமிருக்க இந்தியாவில் 100 கோடிக்கும் மேல் மொபைல் போன்கள் இருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

சுமார் 140 கோடி பேர் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 116 கோடிக்கும் மேல் மொபைல்போன்கள் இருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சுமார் 45 கோடியே 10 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் செயலில் உள்ளதாகவும், இதில் 36 சதவிகிதம் இணைப்புகள் இணையப் பயன்பாட்டிற்காக உபயோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய நகர் மற்றும் கிராமப்புறங்களில் செல்போன்கள் வைத்திருப்பவர்களில் 99 சதவிகிதத்தினர் மொபைல் இணையதளத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதற்கு மலிவு விலையில் டேட்டா சேவை வழங்கப்படுவது மற்றும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பது போன்றவைகளே காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் மொத்தமுள்ள மக்கள் தொகை சுமார் 140 கோடியாக கணக்கிடப்படும் நிலையில், 116 கோடி மொபைல்கள் பயன்பாட்டில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 3.7 மணி நேரம் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதாகவும், இது 2017ஆம் ஆண்டைவிட 25 சதவிகிதம் ‌அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலக அளவில் ஒரு ஜிபி மொபைல் டேட்டாவின் விலை சராசரியாக 597 ரூபாயாக உள்ள நிலையில், இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டாவின் விலை சுமார் 18 ரூபாயாகவே உள்ளதால் பயன்பாடு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஸ்மார்ட் போன்கள் மூலம் கேம்ஸ் விளையாடுவதில் சர்வதேச அளவில் இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கேம்ஸ் விளையாடுவதற்கு சராசரியாக வாரத்திற்கு 7.11 மணி நேரம் செலவிடுகிறார்கள் என்றால் இந்தியாவில் 6 புள்ளி 92 மணி நேரம் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.