Wagner pt desk
இந்தியா

உயிரை பணயம் வைத்து ’வாக்னர்’ ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள்; பின்னணி என்ன? வெளியான பகீர் தகவல்!

ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் வாக்னர் ராணுவத்தில் இந்தியர்கள் இணைந்து பங்கேற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ள நிலையில், ரஷ்ய அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

webteam

டெல்லி செய்தியாளர்: கணபதி சுப்பிரமணியம்

வாக்னர் ராணுவம் ரஷ்ய அரசின் உதவியுடன் செயல்பட்டு வரும் தனியார் ராணுவமாகும். உக்ரைன் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்துள்ள ரஷ்ய இராணுவத்துக்கு ஆதரவாக வாக்னர் ராணுவமும் போரில் ஈடுபட்டு வருகிறது. துபாய் மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு பணிகளில் பல இந்தியர்கள் ரஷ்ய படைகளுக்கு பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் இதில் பலர் உக்ரைன் போர் முனையில்உள்ளனர் எனவும் வந்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்திய தூதரகம் மூலம் ரஷ்ய அரசை அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.

Indians

போர் முனைகளில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் விரைவாக அவர்களை அங்கிருந்து விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய தூதரக அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ரஷ்ய ராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பான சரியான விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை என்கிற நிலையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ரஷ்யாவில் இத்தகைய பணிகளில் இணைந்துள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் உக்ரைன் போர் முனையில் பணிபுரிந்து வருகின்றனர்.

ராணுவத்தில் உதவியாளர்களாகவும் அல்லது பொருட்களை சுமந்து செல்பவர்களாகவும் இவர்கள் பணிபுரிந்து வருவதாக மாஸ்கோ மூலம் தகவல் வந்துள்ளது. ஆனால், இதில் சிலர் தங்களை போர் நடவடிக்கைகளில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் இதனால்உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குடும்பத்தினர் மூலம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புகார்களின் அடிப்படையில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அங்குள்ள ரஷ்ய அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களை மீட்க வலியுறுத்தி வருகின்றனர்.

Indians

இந்தியர்கள் கவனமாக இருக்கும்படியும், போர்க்களப் பகுதியை தவிர்க்க வேண்டும் எனவும் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெயஸ்வால் தெரிவித்தார். ரஷ்ய ராணுவத்துக்கு பணிபுரியும் இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து ரஷ்யா அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாக ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் இந்திய இளைஞர்களை போலவே ரஷ்ய ராணுவத்துக்கு பணிபுரிந்து வருகின்றனர். இதில் பலர் வாக்னர் தனியார் ராணுவத்திற்கு பணிபுரிகிறார்கள் என அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஏஜெண்டுகள் பல லட்சம் ரூபாய்களை வாங்கிக் கொண்டு இத்தகைய ஆபத்தான பணியில் சேர்த்து விட்டு ஏமாற்றியதாக குடும்பத்தினர் புகார் அளித்ததையடுத்து இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது