Localcircles என்ற தனியார் ஆய்வு நிறுவனம் சார்பில், இந்தியாவில் நாடு முழுவதிலும் 367 மாவட்டங்களில் 48,000 பேரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “6 இந்தியர்களில் ஒருவர் நிதிச்சேவைகளுக்கான கடவுச்சொல்லை பாதுகாப்பற்ற முறையில் கையாள்கின்றனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “17 சதவிகிதம் பேர் ஏடிஎம், டெபிட், கிரெடிட் அட்டைகளின் பாஸ்வேர்டை செல்போன்களில் தொலைபேசி எண்கள் போலவும், போன்களில் குறிப்புகளாகவும் பாதுகாப்பற்ற முறையில் பதிவு செய்து வைத்துனர்.
மூன்றில் 2 பேர் கடவுச்சொற்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர். 34% பேர் தங்களின் வங்கிக்கணக்கு உள்ளிட்ட முக்கியமான கடவுச்சொற்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதில், பலரும் குடும்ப உறுப்பினர்களிடம் கடவுச்சொல்லை பகிர்ந்துகொள்கின்றனர். சிலர் அலுவலகங்களில் சக ஊழியர்களிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்வதாக தெரிவித்திருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் தான் அல்லது தங்களின் குடும்பத்தினர் நிதி மோசடிகளில் சிக்கியிருப்பதாக 53 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் வங்கி மோசடிகள் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அண்மையில் ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களை வெளியிட்டிருந்ததை செய்திகளில் பார்த்திருப்போம்.
நாளுக்குநாள் புதுப்புது வகைகளில் சைபர் கிரைம் குற்றங்கள் நடந்து வருகின்றன. எனவே, வங்கிக்கணக்குக்கான பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொல்லை சரியாக கையாள்வது அவசியம். குறிப்பாக, வங்கிகள் அறிவுறுத்துவதுபோல கடவுச்சொல்லை கடினமாக அமைப்பது, அடிக்கடி மாற்றிக்கொள்வது போன்றவைகளை செய்தால் நிதிமோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும்.