இந்தியாவின் ராஜஸ்தானில் வசித்து வந்த அஞ்சு என்ற திருமணமான பெண் ஒருவர், பாகிஸ்தானில் இருந்த தனது முகநூல் நண்பரான நஸ்ருல்லா என்பவரை காண கடந்த ஜூலை மாதம் அங்கு சென்றார். சென்றவர், அங்கே நஸ்ருல்லாவை மறு திருமணம் செய்துகொண்டார். இங்கிருந்த தன் கணவரை விவாகரத்து செய்யாமல் நஸ்ருல்லாவை திருமணம் செய்திருந்தார் அஞ்சு. அஞ்சுவுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். நஸ்ருல்லாவை திருமணம் செய்த அஞ்சு, அங்கேயே தங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளார் அஞ்சு.
இதுகுறித்து பஞ்சாப்பிலுள்ள விமான நிலையத்தில்வைத்து செய்தி நிறுவனத்திற்கு நேற்று பேசியுள்ள அஞ்சு, “நான் சந்தோஷமாக இருக்கிறேன். இதுதவிர என்னிடத்தில் தற்போது சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை” என்று தெரிவித்தார்.
முகநூல் மூலம் நண்பராகி அஞ்சுவை திருமணம் செய்துகொண்டவரான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா, “நாங்கள் பாகிஸ்தான் அரசிடம் இருந்து நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ் கூறி விண்ணப்பித்துள்ளோம்.
தனது குழந்தைகளை பார்ப்பதற்காகத்தான் அஞ்சு இந்தியா செல்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக நஸ்ருல்லா மற்றும் அஞ்சு மீது ராஜஸ்ஹானில் வசிக்கும் அஞ்சுவின் முதல் கணவரான அரவிந்த், காவல் நிலையத்தில் சட்டப்பிரிவு 366 (திருமணம் செய்ய வற்புறுத்த பெண்ணைக் கடத்துதல்), இந்திய தண்டனைச் சட்டத்தின் 494 (முந்தைய துணையை விவாகரத்து செய்யாமல் வேறொரு நபரை திருமணம் செய்தல்), 500 (அவதூறு) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதில், “என்னை மோசடி செய்து, அஞ்சு இரண்டாம் திருமணம் செய்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவின் வாகா எல்லையை அடைந்த அஞ்சு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பின் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான் அல்வார் மாவட்டத்தினை சேர்ந்த 34 வயதான அஞ்சு ரஃபேல் என்ற பெண்ணுக்கு திருமணமாகி 5 வயது மகன் மற்றும் நான்கு வயது மகள் உள்ளனர். இந்நிலையில் தனது முகநூல் நண்பரான நஸ்ருல்லா (பாகிஸ்தானை சேர்ந்தவர்) என்பவரை நேரில் சந்திக்க அவர் வசித்து வரும் பகுதியான பாகிஸ்தானுக்கு கடந்த ஜூலை மாதம் சென்றிருந்தார் அஞ்சு.
அதுவும் தன் வீட்டில் கணவர், குழந்தைகள், தன்னுடைய தாய் தந்தை என யாரிடமும் சொல்லாமல் பயணம் மேற்கொண்டார் அஞ்சு.
இது குறித்து அஞ்சுவின் தந்தை, “என் மகளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவள் அடிக்கடி விசித்திரமான செயல்களை செய்வாள். எனவே அவளை நான் கண்டுகொள்வது இல்லை. என் மகள் மன உளைச்சலில் இருக்கிறாள். அவள் குறித்து எதுவும் எனக்கு தெரியாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ‘அஞ்சு அவரது முகநூல் நண்பரை இரண்டாவதாக திருமணம் செய்யதான் அங்கு சென்றார்’ என்று பல வதந்திகள் கிளம்பின.
ஆனால் நஸருல்லாவோ, “எங்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை. அவரின் (அஞ்சு) ஒரு மாத கால விசா முடிந்ததும் இந்தியா திரும்பிவிடுவார்” என்று கூறினார். அஞ்சுவும் “இப்படி வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்தார். ஆனால் இறுதியில் நஸ்ருல்லாவும் அஞ்சுவும் திருமணம் செய்து கொண்டனர்.
சரியாக ஜூலை 25, 2023-ல் மதம் மாறி தனது முகநூல் நண்பர் நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டார் அஞ்சு. அவர்களுடைய திருமணத்தை மேல்திர் மாவட்ட மூத்த காவல் அதிகாரி முஹம்மது வஹாப் என்பவரும் உறுதிபடுத்தியிருந்தார்.
இந்த சம்பவத்தின் பிறகு அதிர்ச்சி அடைந்த அஞ்சுவின் தந்தை, "இரண்டு குழந்தைகளையும், கணவரையும் விட்டுவிட்டு அஞ்சு சென்ற விதம் கவலை அளிக்கிறது. தன் குழந்தைகளை நினைத்துக்கூட பார்க்கவில்லை. முதல் கணவரை விவாகரத்தாவது செய்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. குழந்தைகளின் எதிர்காலத்தினை அழித்த அஞ்சு என்னை பொறுத்தவரை உயிருடன் இல்லை” என்று கோபத்துடன் பேசி இருந்தார்.
இந்நிலையில்தான் அஞ்சு தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். தன் குழந்தைகளைக்காண அஞ்சு இந்தியா சென்றுள்ளார் என நஸ்ருல்லாவும் பேசியுள்ளார்.