இந்தியா

“யாரை அணுக வேண்டும் என்று கூட தெரியவில்லை” - பிலிப்பைன்ஸில் தவிக்கும் இந்திய மாணவர்கள்

webteam

எங்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என பிலிப்பைன்ஸில் தவிக்கும் இந்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று களம் கண்டு வரும் மருத்துவத் துறையினருக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஒடிஷா மாநிலத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மற்ற மருத்துவத் துறை பணியாளர்களுக்கு நான்கு மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்க ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலும் மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே உலகம் முழுவதும் இதுவரை 4, 61,009 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 20, 846 பேர் உயிரிழந்துள்ளனர். 3,26,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,13,799 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சீனாவில் 3,281, இத்தாலியில் 7,503, அமெரிக்காவில் 1027 , ஸ்பெயினில் 3,445, ஈரானில் 2,077 , பிரான்ஸில் 1,331 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் -ஐ பொருத்தவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், எங்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என பிலிப்பைன்சில் தவிக்கும் இந்திய மாணவர்கள் 400 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், “எங்களுக்கு உணவு, குடிநீர், முகக்கவசங்கள் இல்லை. மின்சார வசதி இல்லாததால் டார்ச் ஏந்தியிருக்கிறோம். இந்திய அரசு எங்களை அழைத்துச் செல்ல முன்வர வேண்டும். யாரை அணுக வேண்டும் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை” என வாட்ஸ் அப் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.