இந்தியா ரயில்வே முகநூல்
இந்தியா

தண்ணீர் இல்லாத அசுத்தமான கழிவறை.. பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க ரயில்வேக்கு உத்தரவு!

அசுத்தமான மற்றும் தண்ணீர் வராத கழிவறையை பயணிகளுக்கு வழங்கி உள்ளது இந்திய ரயில்வே. இதனால் பாதிக்கப்பட்ட பயணி ஒருவருக்கு இழப்பீடாக, ரூ.30000 ரூபாயை இந்திய ரயில்வே வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அசுத்தமான மற்றும் தண்ணீர் வராத கழிவறையை பயணிகளுக்கு வழங்கி உள்ளது இந்திய ரயில்வே. இதனால் பாதிக்கப்பட்ட பயணி ஒருவருக்கு இழப்பீடாக, ரூ.30000 ரூபாயை இந்திய ரயில்வே வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது எந்த மாநிலத்தில், மாவட்டத்தில் நடந்தது? விரிவாக அறியலாம்...

அந்நியன் படத்தில் நடிகர் விக்ரம் ‘டிடிஆர்... டிடிஆர்’ என்று மூச்சுக்கு முந்நூறு முறை அழைத்து ரயிலின் தூய்மையின்மை குறித்து தெரிவிப்பது போல, நிஜத்தில் ஒரு ரயில் பயணி நடந்திருக்கிறார். ரயிலில் நடந்த அந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

சம்பவத்தின்படி கடந்த ஜூன் 3, 2023 அன்று, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வி மூர்த்தி என்னும் 55 வயது நபர் திருப்பதியிலிருந்து விசாகப்பட்டினம் துவ்வாடாவிற்கு செல்வதற்காக, திருமலா எக்ஸ்பிரஸில் நான்கு 3AC டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார்.

அவர்களுக்கு B -7 கோச்சில் பர்த்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், திடீரென 3A விலிருந்து 3E க்கு இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளதாக, மூர்த்திக்கு இந்திய ரயில்வேயிடமிருந்து குறுஞ்செய்தி வாயிலாக தகவல் வந்துள்ளது. அவரும் அதை நம்பி அங்கே சென்றபோது, கோச்சின் ஏர் கண்டிஷனிங் சரியாக வேலை செய்யாமலும், கழிவறையில் தண்ணீர் விநியோகம் இல்லாமல் அசுத்தமான முறையிலும் இருந்துள்ளது. போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் பெட்டிகள் இருந்ததால் மூர்த்தியும் அவருடன் சென்றோரும் கடுமையாக அவதியடைந்துள்ளனர்.

இதனால் ரயிலிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார் மூர்த்தி. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. தொடர்ந்து, துவாடாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என்று விசாகப்பட்டினம் நுகர்வோர் குறைதீர்ப்பு நீதிமன்றத்தில் இந்திய ரயில்வே மீது புகார் அளித்தார் மூர்த்தி.

FILE IMAGE

அப்போது ஆணையத்தில் வாதிட்ட இந்தியன் ரயில்வே... “மூர்த்தியின் வாதங்கள் பொய்யானவை. அவர் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக இதை செய்துளார். மூர்த்தியும் அவரது குடும்பமும் பாதுகாப்பாக பயணத்தை கழித்தனர். ரயில்வே வழங்கிய சேவையை அனுபவித்தனர்” என்று வாதிட்டது.

இதற்கு தீர்ப்பளித்த விசாகப்பட்டின நுகர்வோர் நீதிமன்றம், “பயணிகளுக்கு அடிப்படை தேவைகளை வழங்க வேண்டியது ரயில்வேயின் கடமை. இதை எதுவும் சோதனை செய்யாமல் ரயில் இயக்கப்பட்டுள்ளது” என்று கூறியது.

இதனை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவே “ரயில்வே நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தால் மூர்த்தி உடல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய ரூ 25,000, சட்ட செலவுகளுக்கு ரூ 5,000 என்று மொத்தம் 30,000 ரூபாயை அவருக்கு ரயில்வே வழங்க வேண்டும்” என்று தென் மத்திய ரயில்வேக்கு (SCR) உத்தரவிட்டுள்ளது.