கொரோனா தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 3 நகரங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) பயணிக்கிறார். அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்ப பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் உயிரி தொழில்நுட்ப மையம், புனேவில் உள்ள இந்திய சீரம் மையம் ஆகியவற்றுக்கு அவர் பயணிக்கிறார்.
'கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் இறுதிகட்டத்தில் இந்தியா நுழைந்துள்ளதால், இந்த மையங்களுக்கு பிரதமர் மேற்கொள்ளும் பயணம் மற்றும் விஞ்ஞானிகளுடன் நடத்தும் ஆலோசனை ஆகியவை மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கான தயார் நிலை, சவால்கள் மற்றும் திட்டம் குறித்த முதல்கட்ட விவரங்களை அவர் அறிய உதவும் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இதனிடையே, கோவிட் தொற்றிலிருந்து இந்திய அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால் குணமடைந்தோர் வீதம் 93.65 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் இன்றைய நிலவரப்படி, மொத்தம் 4,55,555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 4.89 சதவீதம்.
சிகிச்சை பெறுபவர்களில் 70 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 87,014 கொரோனா நோயாளிகளுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. 64,615 பேருடன் கேரளா 2-ம் இடத்திலும், 38,734 பேருடன் தில்லி 3ம் இடத்திலும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 43,082 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 39,379 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 87 லட்சத்தைத் (87,18,517) தாண்டியுள்ளது. குணமடைந்தோர் வீதம் 93.65 சதவீதமாக கூடியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 492 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 75.20 சதவீதம் பேர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள். டெல்லியில் 91 பேரும், மகாராஷ்டிராவில் 65 பேரும், மேற்கு வங்கத்தில் 52 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.