ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி ட்விட்டர்
இந்தியா

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரியா சென்ற இந்திய பிரதமர் மோடியின் பயணமும் பயனும்!

பிரதமர் மோடியின் ஆஸ்திரியா பயணம் ஏன் முக்கியமானது? கடந்த காலங்களில் எந்தெந்த இந்திய தலைவர்கள் அங்கு பயணம் செய்திருக்கிறார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

webteam

செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 41 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன் ஆஸ்திரியா சென்ற இந்திய பிரதமர்கள்!

கடைசியாக 1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆஸ்திரியாவுக்கு பயணம் செய்துள்ளார். அவர் அதற்கு முன் 1971 ஆம் ஆண்டிலும் இந்நாட்டிற்கு சென்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1955இல் ஆஸ்திரியாவுக்கு சென்ற முதல் இந்திய தலைவர் ஆவார்.

இதற்கு முன் ஆஸ்திரியா சென்ற இந்திய குடியரசுத் தலைவர்கள்!

நவம்பர் 1999இல் அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஆஸ்திரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

PM Modi

அதன் பிறகு 2011இல் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஆஸ்திரியா சென்றார்.

இந்தியா - ஆஸ்திரியா நல்லுறவு!

இந்தியா - ஆஸ்திரியா உறவானது 75 ஆண்டுகளாக நல்லுறவுடன் இருந்து வருகிறது. 1947இல் இந்தியாவின் சுதந்திரத்தை ஆஸ்திரியா அங்கீகரித்தது. இரு நாடுகளும் 1949இல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின. இதன் மூலம் இரு நாடுகளும் பரஸ்பரம் தலைநகரங்களில் தூதரகங்களைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நேர்மறையான நல்லுறவு, பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்தும் பேணப்படுகிறது.

முதல் முறையாக 2017ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் சர்வதேச பொருளாதார மன்றத்தில் பங்கேற்றபோது, ஆஸ்திரியா அதிபர் கிறிஸ்டியன் கெர்னுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இந்தியா மற்றும் ஆஸ்திரியா இருதரப்பு வர்த்தகம் சீராக வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு இயந்திரங்கள், வாகன பாகங்கள் மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றை ஆஸ்திரியா ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆஸ்திரியா ஆதரித்துள்ளது.

ஆஸ்திரியாவில் மோடி

காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய அக்கறை கொண்ட பிரச்னைகளில் இரு நாடுகளுமே ஒத்துழைப்பை தந்து நட்புறவை ஆழமாக்கி வருகின்றன. பொதுவாகவே இரு நாடுகள் இடையிலான உயர்மட்ட தலைவர்கள், அதிகாரிகளின் பயணங்கள் அரசியல் உறவுகளை வலுப்படுத்துகின்றன. அந்த வகையில் ஆஸ்திரியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியின் வரலாற்று பயணமும் அமைந்துள்ளதாக பார்க்கலாம்.