இந்தியா

இன்று இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

இன்று இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

webteam

பிரதமர் மோடி இன்று இலங்கை செல்ல உள்ளார். இன்று மதியம் கொழும்பு வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி 2வது முறையாக பதவியேற்றுக் கொண்ட பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று மாலத்தீவு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து அவர் இன்று இலங்கை செல்கிறார். அதிபர் சிறிசேனவும் பிரதமர் மோடியும் அரசுப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் என்றும் இலங்கை அதிபர் மாளிகையின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று மோடி இப்பயணத்தை மேற்கொள்வதாகவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமரின் இப்பயணம் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதுணையாக அமையும் என்று இலங்கை எதிர்பார்ப்பதாக அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு பிற்பகல் 3 மணி அளவில் கொழும்பிலிருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் ரேணிகுண்டா புறப்படுகிறார். மாலை 4.30 அளவில் ரேணிகுண்டா விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் திருமலைக்குச் செல்ல உள்ளார். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேர ஓய்வு எடுக்கிறார். 

பின்னர் மாலை 6 மணி அளவில் திருப்பதி திருமலை கோயிலில் தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் இரவு 7 மணி அளவில் டெல்லி புறப்படுகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி திருப்பதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.