இந்திய கடற்படை முகநூல்
இந்தியா

கப்பலில் காயங்களோடு தவித்த சீன கடற்படை மாலுமி; மனிதாபிமானத்தோடு உதவிய இந்திய கடற்படை!

கப்பலில் காயங்களோடு தவித்த சீன கடற்படை மாலுமியை காப்பாற்றிய இந்திய கடற்படை. 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சீன கடற்படை வீரர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்

PT WEB

செய்தியாளர்: பால வெற்றிவேல்

கப்பலில் காயங்களோடு தவித்த சீன கடற்படை மாலுமியை காப்பாற்றிய இந்திய கடற்படை. 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சீன கடற்படை வீரர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.

மும்பை நகரத்தில் இருந்து அரபிக் கடலில் 370 கிலோ மீட்டர் தொலைவில் சீனாவை சேர்ந்த சரக்கு கப்பலான ZHONG SHAN MEN லிருந்து 23ஆம் தேதி மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர உதவி கோரப்பட்டது. கப்பலுக்குள் ஏற்பட்ட விபத்து காரணமாக 51 வயது மதிக்கத்தக்க சீனாவின் கடற்படை வீரருக்கு கடுமையான காயம் மற்றும் ரத்த இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவ அவசர நிலையை கருத்தில் கொண்டு உதவுமாறு சீனக் கப்பல் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

23ஆம் தேதி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் உடனடியாக இந்திய கடற்படையின் போட்டுகள் மூலம் அழைத்து வரப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதிக காற்று மற்றும் தொலைவு அதிகம் என்பதால் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வருவது தான் சிறந்த திட்டம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய கடற்படையின் உதவியுடன் INSshikra லிருந்து உதவி ஹெலிகாப்டர் சீன சரக்கு கப்பலுக்கு 25ம் தேதி காலை 5 மணிக்கு சென்றது. அதிக அளவிலான காற்று, சவாலான வானிலைக்கு மத்தியில் சீன கடற்படை வீரர் இந்திய ஹெலிகாப்டரில் இயற்றப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்ட சீன கடற்படை வீரர் உயிர்பிழைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

மேலும், ஐ.சி.ஜி.எஸ்.சாம்ராட் ரோந்து கப்பலும் சீனக் கப்பலுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அரபிக் கடல் ஒட்டியுள்ள கேரளா மும்பை உள்ளிட்ட பகுதிகள் சர்வதேச கடல் வணிகப் பாதை என்பதால், அவ்வப்போது சர்வதேச கப்பல்களில் இருந்து உதவிகள் கேட்கப்படும்.

அவ்வாறு உதவிகள் கேட்கப்படும் கப்பல்களில் மனிதாபிமான அடிப்படையில் இந்திய கடற்படை தொடர்ச்சியாக உதவிகள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் எதிரி நாடு என வர்ணிக்கப்படும் சீனாவின் கடற்படை வீரரை இந்திய கடற்படை காப்பாற்றியுள்ளது.