இமயமலை அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் மலைப்பகுதிகள் அதிகம் உள்ளன. இங்குள்ள மலைப் பகுதிகளில் பலரும் மலையேற்றம் செல்வதுண்டு. அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் அனுராக் மாலு நேபாளத்தில் மலையேற்றம் சென்று இருந்தார். இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்ணா மலையை சென்றடைய அனுராக் மாலு திட்டமிட்டு இருந்தார்.
ஏப்ரல் 17 அன்று அன்னபூர்ணா சிகரத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய அனுராக் மாலுவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர் எதிர்பாராதவிதமாக 6,000 மீட்டர் ஆழமுள்ள பனிப்பிளவு பாறை ஒன்றுக்குள் தவறுதலாக விழுந்துவிட்டதாக சக மலையேற்ற வீரர்கள் கூறினர். இதனையடுத்து மலையேற்ற குழுவின் பொறுப்பாளர் மிங்மா ஷெர்பா, அனுராக் மாலு காணவில்லை என்ற தகவலை வெளியிட்டார். இதையடுத்து அனுராக் மாலுவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நான்கு நாட்களுக்குப் பின் அனுராக் மாலு இன்று உயிருடன் மீட்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அனுராக் மாலுவின் சகோதரர் சுதிர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர்க் என்ற பகுதியைச் சேர்ந்த அனுராக் மாலு, REX KaramVeer Chakra விருது பெற்றவர். பல்வேறு சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்ற இவர் 8,000 மீட்டர் உயரத்துக்கும் மேல் உள்ள 14 சிகரங்களை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.